search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை
    X
    யானை

    தொப்பம்பட்டி அருகே காட்டு யானை தாக்கி ஆஸ்பத்திரி ஊழியர் பலி

    2 நாளில் 2 பேரை காட்டு யானை அடித்துக்கொன்ற சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    கவுண்டம்பாளையம்:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான மாங்கரை, கணுவாய், தடாகம், ஆனைகட்டி ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது ஊருக்குள் உணவு மற்றும் குடிநீர் தேடி வந்து விடுகிறது. இதனால் பயிர் சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்படுகிறது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விநாயகன், சின்னதம்பி ஆகிய காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி விநாயகனை முதுமலைக்கும், சின்னதம்பியை டாப்சிலிப்புக்கும் அனுப்பி வைத்தனர். இதனால் கடந்த சில நாட்களாக அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    இந்நிலையில் பன்னிமடை சஞ்சீவ் நகரை சேர்ந்த டிரைவர் கணேசன் (வயது 27) என்பவரை நேற்று முன்தினம் ஒற்றை காட்டுயானை அடித்துக்கொன்றது. இதனால் அந்த பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தொப்பம்பட்டி சி.ஆர்.பி.எப். கல்லூரி வழியாக இறங்கிய ஒற்றை காட்டுயானை அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது.

    காட்டுப்பகுதி கணபதி கார்டன் அருகே யானை வந்தபோது அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27), பிரேம் கார்த்திக் (27) ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி காட்டுயானை ஆவேசமாக ஓடி வந்தது. இதைப்பார்த்த வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    இதில் விக்னேஷ் தப்பி ஓடிவிட்டார். பிரேம் கார்த்திக் சிக்கிக்கொண்டார். பிரேம் கார்த்திக்கை காட்டுயானை துதிக்கையால் சுழற்றி காலில் போட்டு மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக ரத்தவெள்ளத்தில் இறந்தார். யானை தாக்கி பலியான பிரேம் கார்த்திக் குனியமுத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் மக்கள் தொடர்பு அலுவலராக வேலை பார்த்தவர் ஆவார்.

    அடுத்தடுத்த 2 நாளில் 2 பேரை காட்டுயானை அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×