search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    உளுந்தூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ. 3 லட்சம் பணம் கொள்ளை

    உளுந்தூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ. 3 லட்சம் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நெய்வெனை கிராமத்தில் பிரசித்திப்பெற்ற சொர்ணகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும் அர்ச்சகர் கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு மர்ம நபர்கள் கோவில் சுவர் ஏறி உள்ளே குதித்தனர். பின்னர் கோவிலில் உள்ள உண்டியலை பெயர்த்து எடுத்தனர். இதனையடுத்து உண்டியலை அலாக்காக தூக்கிக்கொண்டு கோவில் வளாகத்தில் வைத்து உடைத்தனர். பின்னர் அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை அர்ச்சகர் கோவிலுக்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது கோவிலில் சில்லரை காசுகள் சிதறி கிடப்பதை பார்த்தார்.

    உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரூ. 3 லட்சம் பணம் கொள்ளை போய் இருக்கும் என அர்ச்சகர் தெரிவித்தார்.

    இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் இரவு எலவனாசூர்கோட்டை பகுதியில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.இந்த சம்பவத்தில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் யார்? என்று இதுவரை துப்புதுலங்கவில்லை. அதற்குள் இன்னொரு கோவிலில் கொள்ளை நடந்துஇருப்பது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்த கும்பல்தான் சொர்ணகடேஸ்வரர் கோவிலிலும் திருடி இருக்க கூடும் என சந்தேகிக்கிறோம். எனவே போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×