search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழிசை சவுந்தரராஜன்
    X
    தமிழிசை சவுந்தரராஜன்

    பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை 33 லட்சத்தை தாண்டியுள்ளது- தமிழிசை சவுந்தரராஜன்

    பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை 33 லட்சத்தை தாண்டியுள்ளது என்றும் தங்களின் உழைப்பை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    சென்னை :

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்ட பிரிவை நீக்கிய நிகழ்வு குறித்து ராஜலட்சுமி மண்டா குழுவினர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவினர் தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாயத்திற்கு நேற்று வந்தனர். அவர்களை தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் வரவேற்றனர். இந்த நிகழ்வில் ஊடகப்பிரிவு தலைவர்கள் பிரசாத், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ராஜலட்சுமியின் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்தார்.

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜலட்சுமியின் விழிப்புணர்வு பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திரமோடி உழைக்கிறார். தமிழக பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.

    கிராமத்து இளைஞர்கள் விருப்பத்துடன் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதை அனைவரும் வரவேற்றுள்ளனர். இதற்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து இருக்கிறது.

    எங்கள் உறுப்பினர் சேர்க்கை 33 லட்சத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் சிலர் பா.ஜ.க.வின் உறுப்பினர் சேர்க்கையை விமர்சனம் செய்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. தென் மாவட்டங்களில் அதிக உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறோம். தமிழகத்தில் மிக சவாலான பிரச்சினையை எதிர்கொண்டு உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறோம். எங்களின் உழைப்புக்கு மத்திய தலைமை பாராட்டு தெரிவித்து இருக்கிறது. அதனால் எங்களின் உழைப்பை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

    ராஜலட்சுமி குழுவினரை தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டி, அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டபோது எடுத்த படம்.

    மோடியை விமர்சித்தவர்கள் அனைவரும் இன்றைக்கு அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ப.சிதம்பரம் கூட பாராட்டு தெரிவித்து இருக்கிறார். எங்களை பொறுத்தவரையில் மக்கள் நலனில் கவனம் செலுத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது. இந்த தேர்தலை எவ்வளவு விரைவாக நடத்த வேண்டுமோ அவ்வளவு விரைவாக நடத்த வேண்டும். இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று தான் அ.தி.மு.க.வும் நினைக்கிறது, தி.மு.க. தான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, தடை பெற்றது. இது எல்லோருக்கும் தெரியும்.

    பால் விலை அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை எல்லாமே அரசியல் ஆக்கப்படுவது சகஜம் தான். 4½ லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு பலன் தருவதற்கான அறிவிப்பை தான் முதல்-அமைச்சர் வெளியிட்டார். தனியார் பால் விலை அதிகமாக இருக்கிறது. அதை கேட்காமல், ஆவின் விலை ஏற்றினால் மட்டும் கேட்கிறார்கள். கொஞ்சமாக உயர்த்தி இருக்கலாம் என்பது தான் எங்கள் கருத்து.

    ஆனால் தி.மு.க. போல் யாரும் இரட்டை வேடம் போட முடியாது. சட்டசபையில் கொள்முதல் விலை உயர்த்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார், கொள்முதல் விலையை உயர்த்தும்போது, பால் விலை உயரும் என்று அவருக்கு தெரியாதா?. வெளிநடப்பு செய்யும் தலைவரிடம் இருந்து இதை விட வேறு எதை எதிர்பார்க்க முடியும். அதனால் தான் சொல்கிறேன், தி.மு.க. போல் யாரும் இரட்டை வேடம் போட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, திரைப்பட இயக்குனர் திருமலை மற்றும் ஜெ.தீபா பேரவையில் இருந்து விலகிய ஏராளமானவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
    Next Story
    ×