search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூல்
    X
    தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூல்

    தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு - பொதுமக்கள் அவதி

    சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லும் பொதுமக்களிடம் தனியார் வாகனங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. இதனால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    கூடலூர்:

    கூடலூர், கேரள பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கூடலூர்- மலப்புரம், கோழிக்கோடு, சுல்தான்பத்தேரி சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. மேலும் சாலைகளும் உடைந்து துண்டித்தது. தற்போது கூடலூர்- கோழிக்கோடு, சுல்தான்பத்தேரி செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் கூடலூரில் இருந்து நாடுகாணி, கீழ்நாடுகாணி வழியாக மலப்புரம் செல்லும் மலைப்பாதையில் பல கி.மீட்டர் தூரத்துக்கு நிலச்சரிவு, பாறைகள் விழுந்துள்ளது.

    மேலும் சாலையும் பல இடங்களில் உடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலை என்பதால் சீரமைப்பு பணி உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. நிலச்சரிவு, வெள்ள பாதிப்புகள் கேரளாவில் அதிகமாக நடைபெற்றுள்ளதால் மீட்பு நடவடிக்கைகளை அதிகாரிகளால் உடனடியாக சரி செய்ய முடிய வில்லை. மேலும் கூடலூர்- மலப்புரம் மலைப்பாதையை சீரமைக்க தொடங்கினாலும் பணி முடிய 2 மாதங்கள் வரை ஆகும் என கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கூடலூரில் இருந்து மலப்புரத்துக்கு செல்லும் இடங்களில் நாடுகாணி, கீழ்நாடுகாணி உள்பட பல கிராமங்கள் உள்ளது. மலப்புரத்தில் இருந்து கேரள அரசு பஸ்கள் அதிகளவு இயக்கப்பட்டு வந்ததால் கிராம மக்கள் பயன் அடைந்து வந்தனர். தற்போது 12-வது நாளாக சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளதால் பஸ் வசதி இன்றி தனியார் வாகனங்களை நாடுகாணி, கீழ்நாடுகாணி பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளும் கூடலூருக்கு வந்து செல்கின்றனர்.

    இதனை பயன்படுத்தி தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வரை தமிழக பஸ்களை இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி பெரியசோலை, எல்லமலைக்கு செல்லும் சாலையில் சேரன் நகர் பகுதியில் பாலம் உடையும் நிலையில் உள்ளது. இதனால் பெரியசோலை, எல்லமலைக்கு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் வேறு பாதையில் தனியார் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் கூடுதல் கட்டணம் செலுத்தி பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜ்குமாரிடம் கேட்டபோது, எல்லமலைக்கு செல்லும் வழியில் சேரன் நகரில் பாலம் மோசமாக உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சேரன்நகர் வரை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. கூடலூர்- மலப்புரத்துக்கு செல்லும் மலைப்பாதையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை.

    எனவே கீழ்நாடுகாணி பகுதி மக்கள் தமிழக பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையொட்டி பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை என 2 முறை கூடலூர்- கீழ்நாடுகாணிக்கு இன்று(திங்கட்கிழமை) முதல் பஸ் விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×