search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீ விலை உயர்வு
    X
    டீ விலை உயர்வு

    டீ விலை உயர்வால் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு

    குமரி மாவட்டத்தில் ஆவின் பால் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக டீக்கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆவின் பால் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக டீக்கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்படுகிறது. ஆவின் பால் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளதால் நாளை முதல் டீ விலையை உயர்த்த டீக்கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவிலில் ஒரு டீ ரூ.8-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் ரூ.10 வரை விற்பனையாகிறது. ரூ.8-க்கு விற்பனை செய்யப்படும் கடைகளில் டீ விலையை ரூ.10 ஆகவும், காபி விலையை ரூ.12 ஆகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதேபோல ரூ.10-க்கு டீ விற்பனையாகும் கடைகளில் கூடுதலாக ரூ.2 வசூலிக்கவும் டீக்கடைக்காரர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் டீ குடிப்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    இதுபற்றி இன்று காலை டீக்கடைகளில் டீக்குடிக்க வந்தவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

    செந்தில்குமரன் (நாகர்கோவில் கோட்டார்):-

    தமிழக அரசு ஆவின் பால் விலையை உயர்த்தியதால் டீ விலையையும் உயர்த்த உள்ளனர். இது எங்களை போன்ற நடுத்தர மற்றும் ஏழை மக்களை பெரும் பாதிப்புக் குள்ளாக்கும். தொழிலாளர்களுக்கு சாப்பாடு கூட முக்கியம் கிடையாது. ஒரு நாளைக்கு 4 முதல் 5 டீ குடித்துக் கொண்டே வேலை பார்த்து விடுவோம். இப்போது டீ விலை உயர்வதால் உழைக்கும் பணத்தில் பாதி அதற்கே சென்று விடும். எனவே ஆவின் பால் விலை உயர்வை குறைக்க வேண்டும்.

    சுதாகர் (வடிவீஸ் வரம்):-

    நான் பெயிண்டிங் வேலை செய்து வருகிறேன். கட்டிடங்களில் ஏறி வேலை பார்க்கும் போது அடிக்கடி உடல் சோர்வு ஏற்படும். களைப்பு நீங்க நான் காபி குடிப்பேன். விலை உயர்வதால் இனி அடிக்கடி காபி குடிக்க முடியுமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. பால், காபி விலை உயர்வால் எங்களை போன்ற தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளோம். எனவே எங்களை போன்ற தொழிலாளர்களின் நலன் கருதியாவது அரசு பால் விலை உயர்த்திய முடிவை திரும்ப பெற வேண்டும்.

    சவுந்தர பாண்டியன் (கோட்டார்):-

    நான் கூலி வேலை செய்து வருகிறேன். உற்சாகத்துடன் பணியாற்ற தினமும் 3 வேளையும் டீ குடிப்பேன். டீ விலை உயர்வு என்னை மிகவும் பாதிக்கும். மேலும் பால் விலை உயர்வால் வீட்டில் டீ போட்டு குடிக்க ஆகும் செலவும் அதிகரிக்கும். எனவே பால் விலையை குறைக்க வேண்டும்.

    சுரேஷ் (செட்டிக்குளம்):-

    நான் தையல் தொழில் செய்து வருகிறேன். எனக்கு டீ குடித்தால் தான் வேலையே பார்க்க முடியும். சில வேலை சாப்பாடு கூட சாப்பிட மாட்டேன். வேலைப்பளு காரணமாக டீக் குடித்துக் கொண்டே வேலை பார்ப்பேன். சோர்வு நீங்க தினமும் 5 முறை டீக் குடிப்பேன். இனி டீ விலை உயர்வதால் அவ்வாறு அடிக்கடி டீ குடிக்க முடியுமா? என தெரியவில்லை. எனவே பால் விலையை குறைத்து எங்களை போன்ற தொழிலாளர்களுக்கு அரசு உதவ வேண்டும்.

    Next Story
    ×