search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு திட்டம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

    மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் சட்டசபையில் பேசும்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

    ‘முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம்’ என்ற ஒரு சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்த புதிய திட்டம் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்படும்’’ என்று கூறினார்.

    இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக பெரிய சோரகை கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

    பின்னர் அவரது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு உட்பட்ட வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குறைதீர்வு திட்ட விழா நடந்தது. விழாவில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை எடப்பாடி பழனிசாமி வாங்கினார். அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதியிலும் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டு மக்கள் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்படும்.

    மக்கள் அதிகாரிகளை அணுகுவதை காட்டிலும் இப்போது அதிகாரிகள் மக்களை நாடி உங்களிடத்தில் மனுக்களை பெற்று உங்களுடைய பிரச்சினைகளை தீர்வு காணும் விதமாக இந்த திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

    முதல்-அமைச்சர் என்ற முறையிலே, 234 தொகுதிகளில் இருக்கின்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.இருந்தாலும் அவ்வபோது எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு வந்து உங்களை எல்லாம் சந்தித்து, புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறோம். முடிக்கப்பட்ட திட்டத்திற்கு திறப்பு விழா காண்கிறோம்.

    அதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே சிறப்பு முகாம் நடத்தி, நான் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறேன்.நான், முதல்-அமைச்சர் ஆனபிறகு பலமுறை இந்த வழியாக சென்று இருக்கின்றேன். மக்களை சந்தித்து இருக்கின்றேன் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்திருக்கின்றேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிலும், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

    விழாவில் அமைச்சர் உதயகுமார், சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இத்திட்டத்தின் மூலம், அனைத்து நகர்ப்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த ஒரு அலுவலர் குழு, ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் சென்று மனுக்களைப் பெறுவார்கள்.

    இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்துக்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்துக்குள் தீர்வு எட்டப்படும்.

    நாளை (20-ந்தேதி) சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காலை 9.30 மணிக்கும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காலை 11 மணிக்கும், வாழப்பாடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கும் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெறுகிறார்.

    Next Story
    ×