search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட் மதுரை கிளை
    X
    ஐகோர்ட் மதுரை கிளை

    மீனவர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரிய வழக்கு: மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

    மீனவர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரிய வழக்கு தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    ராமநாதபுரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஞானசுந்தரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    அதில், “கடந்த ஜூலை மாதம் 4-ந் தேதியன்று என் கணவர் சிந்தாஸ் மற்றும் சக மீனவர்கள் 3 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால், மறுநாள் வரை கரை திரும்பவில்லை.

    கடலில் திடீரென ஏற்பட்ட புயலில் சிக்கி இருக்கக்கூடும் என்பதால் ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனரிடம் மீட்டு தரக் கோரி புகார் அளித்தும் மீட்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    மறுநாள் மீனவர் சங்கத்தினரோடு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடலுக்கு சென்றவர்களை மீட்பதற்கு நாங்கள் முயன்றபோதும், எங்களை கடலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

    கடலோர பேரிடர் குழுவை அனுப்பி தேடுதல் வேட்டை தொடங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில், போதிய உபகரணங்கள் இல்லாததால் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில், கடந்த ஜூலை 5-ந்தேதி மற்ற மீனவர்கள் தங்கள் நாட்டுப் படகுகளில் சென்று 3 நாள் தேடுதல் நடத்திய பின்னர் 8-ந் தேதி எனது கணவரோடு சென்ற இருவரை புதுக்கோட்டை கடற்கரை பகுதியில் கண்டுபிடித்தனர்.

    மேலும், எனது கணவர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடல் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    4 நாட்கள் உயிருக்கு போராடி பின்பே இறந்துள்ளார். இதற்கு பேரிடர் மேலாண்மை குழுவின் அலட்சியமே காரணம். எனது கணவர் இறந்த நிலையில் எனது பிள்ளைகள் படிப்பு செலவிற்கு போதுமான வருமானம் இல்லை. எனவே, இழப்பீடு நிதியாக 20 லட்ச ரூபாயும், எனக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டி ருந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

    Next Story
    ×