search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தஞ்சை, திருவாரூர், நாகையில் விடிய விடிய பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

    தஞ்சை, திருவாரூர், நாகையில் விடிய விடிய பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அம்மாநிலங்களில் பருமழையின் தாக்கம் குறைய தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் தென்மேற்கு பருவமழை பெய்துவருகிறது.

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. பல நேரங்களில் கருமேகம் சூழ்ந்து அடைமழை வருவது போல் கண்ணாமூச்சி காட்டிசென்று வந்தது.

    போதிய மழை பெய்யாததால் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யமுடியாமல் போனது. இந்நிலையில் கர்நாடகா, கேரளாவில் பெய்த தொடர்மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து ஆயிரக்கணக்கான டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடக்கூடிய சூழல் ஏற்பட்டது. அந்த தண்ணீரானது மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    அந்த தண்ணீரானது கல்லணைக்கு வந்தடைந்தது. இதையடுத்து டெல்டா மாவட்டத்தில் ஒருபோக சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கண்ணாமூச்சு காட்டிவந்த மழை நேற்று சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக பெய்தது பொதுமக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சி அடைய செய்தது.

    தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக பாபநாசத்தில் 114 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதற்கு அடுத்தபடியாக தஞ்சாவூர் 83, திருவையாறு 27, ஒரத்தநாடு 42.80, பூதலூர் 91.80, கும்பகோணம் 27, பேரவூரணி 10.60, பட்டுக்கோட்டை 14.80, மதுக்கூர் 28, திருவிடைமருதூர் 9 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. நேற்று இரவு தொடங்கிய இந்த திடீர் மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இடைவிடாமல் தொடர்ந்து பெய்தமழையில் நனைந்தபடி வாகன ஓட்டிகள் சென்றனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து சிறிய சாரல் மழையாக தொடங்கி பின்னர் பலத்த காற்றுடன் மிக கனமழையாக மாறி சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக பெய்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. இதனால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பள்ளம், மேடு தெரியாமல் தட்டுத்தடுமாறி சென்றனர்.

    திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக குடவாசலில் 90.2 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்து. அதனை தொடர்ந்து திருவாரூரில் 67.6, மன்னார்குடி 52, நன்னிலம் 49.4, திருத்துறைப்பூண்டி 36.4, முத்துப்பேட்டை 38 மி.மீட்டர் மழை பதிவாகிஉள்ளது.

    கடந்த சில நாட்களாக நாகையில் வெயில் வாட்டி வதைத்தது. நேற்று இரவு குளிர்ந்த காற்று வீசி இடியுடன் கூடிய மழை பெய்தது. நாகூர், திட்டச்சேரி, கீழ்வேளூர் வேளாங்கண்ணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வரை லேசான மழை பெய்து கொண்டிருக்கிறது.

    நாகை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி பகுதியில் 55.40 மழையும், நாகப்பட்டினம் 29.70, தலைஞாயிறு 36.80, வேதாரண்யம் 16.40, மயிலாடுதுறை 18.60, சீர்காழி 38.60, கொள்ளிடம் 12.60, மணல்மேடு 34, தரங்கம்பாடி 27 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 55.40 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து இன்று காலை வரை தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் குடைபிடித்தபடி சென்றனர்.

    மழை குறித்து விவசாயிகள் கூறியதாவது:

    கதிர் வரும் தருவாயில் உள்ள நெல் பயிருக்கும், வளர்ச்சிப் பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களுக்கும் இந்த மழை பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த மழையினால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் விரைவாக கடைமடை பகுதிகளை வந்தடையும். இதில் இருந்து கிடைக்கபெறும் தண்ணீரை குடிமராமத்து பணிகளில் தூர்வாரப்பட்ட ஆறு, ஏரி குளங்களில் சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீணாக தண்ணீர் கடலில் கலப்பதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×