search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளை படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளை படத்தில் காணலாம்.

    கள்ளநோட்டு ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட கும்பல் - 3 பேர் கைது

    நாகர்கோவிலில் ரூ.2 ஆயிரம் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட மத்திய அரசு ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பள்ளி விளையைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு செட்டிக்குளம் பகுதியில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றார். அப்போது அவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து டிக்கெட் எடுத்தார். அந்த ரூபாய் நோட்டின் மீது தியேட்டர் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரமேஷ், டிக்கெட் எடுக்க கொடுத்த ரூ.2 ஆயிரம் நோட்டு கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ரூ.2 ஆயிரம் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டதாக அவர் தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவருடன் வாட்டர் டேங்க் ரோடு கேசரி தெருவைச் சேர்ந்த தினகரன் (43), பள்ளிவிளையைச் சேர்ந்த ஜோசப் மெனோவா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    தினகரன் கொச்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சில கடைகள் உள்ளன. அந்த கடைகள் தற்போது காலியாக இருந்தன. இதனால் அந்த கடையில் ஜெராக்ஸ் எந்திரத்தை பொருத்தி வருமானம் பார்க்க தினகரன் திட்டமிட்டார். இதற்காக சென்னையில் கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை ஆர்டர் செய்து நாகர்கோவிலுக்கு வரவழைத்தார்.

    தினகரன் கொச்சியில் பணியாற்றியதால் நாகர்கோவிலில் இருந்த தனது நண்பர் ரமேசை தொடர்பு கொண்டு ஜெராக்ஸ் எந்திரத்தை கடையில் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். ஆனால் ரமேஷ், ஜெராக்ஸ் எந்திரத்தை பொருத்தாமல் காலம் தாழ்த்தினார். இதனால் தினகரன், ரமேசை தொடர்பு கொண்டு விவரம் கேட்டார். அப்போது ஜெராக்ஸ் எந்திரத்தை தனது நண்பர் ஜோசப் மெனோவா வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். அங்கு வைத்து கள்ள நோட்டு ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டு வருகிறோம். இதுவரை அந்த நோட்டுகளை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தொடர்ந்து கள்ள நோட்டு ஜெராக்ஸ் எடுத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என தினகரனிடம் ரமேஷ் ஆசைவார்த்தை கூறினார்.

    அந்த ஆசைவார்த்தையில் தினகரனும் மயங்கி கள்ள நோட்டு ஜெராக்ஸ் எடுக்க சம்மதித்துள்ளார். அதன்படி ஜோசப் மெனோவா வீட்டில் கள்ள நோட்டு ஜெராக்ஸ் எடுத்துள்ளனர்.

    ரமேஷ் அந்த கள்ள நோட்டை புழக்கத்தில் விடும் நடவடிக்கையாக நேற்று காலை செட்டிக்குளத்தில் உள்ள தியேட்டருக்கு சென்று ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றியுள்ளார். மேலும் அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றும் மற்றொரு ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டை மாற்றியுள்ளார். அதன்பிறகும் இரவு காட்சிக்கு அதே தியேட்டருக்கு சென்றபோது தான் சிக்கிக் கொண்டார்.

    ஜோசப் மெனோவா வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த ஜெராக்ஸ் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு 4-ஐயும், ரூ.200 கள்ளநோட்டு ஒன்றும் இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான ஜோசப் மெனோவா சென்னையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    கள்ள நோட்டு விவகாரத்தில் கைதான தினகரன், ரமேஷ், ஜோசப் மெனோவா உள்ளிட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். ஜெராக்ஸ் எந்திரம் மூலம் எவ்வளவு கள்ளநோட்டு அச்சடித்தார்கள், அவர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கும்பல் இப்போது தான் கள்ளநோட்டு அச்சடிக்கிறார்களா? இல்லாவிட்டால் பலகாலமாக இவர்கள் சட்ட விரோதமாக இந்த தொழிலை தான் செய்கிறார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.


    Next Story
    ×