search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    ரூ.10 ஆயிரம் கோடி கடன் வழங்க தமிழக அரசு திட்டம்- அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

    விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பயிர்க்கடனாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்குவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    சம்பா பயிர்க்கடன் வழங்குவது தொடர்பாக திருச்சியில் இன்று அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் பெய்தது போல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் நல்ல மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 111 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். இந்த தண்ணீர் இன்று திருச்சி முக்கொம்புக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த தண்ணீர் சம்பா சாகுபடி செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    கடந்த ஆண்டு இதே தினத்தில் நடந்தது போல திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறோம். இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்கடன், உரக்கடன் வழங்குவது, உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழி செய்வது போன்ற பணிகள் குறித்து ஆலோசனை செய்கிறோம்.

    ஜெயலலிதா

    இந்த ஆண்டு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ.10ஆயிரம் கோடி வழங்குவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 83 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.43 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கியுள்ளோம். ஆனால் தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.9 ஆயிரம் கோடிதான் கடன் வழங்கியுள்ளார்கள். தி.மு.க. விவசாயக்கடன் தள்ளுபடி என்று தேர்தல் நேரத்தில் ஏமாற்றி பிரசாரம் செய்தார்கள். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எப்படி தள்ளுபடி செய்வார்கள். மக்களை ஏமாற்றி விட்டார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியில் தகுதியுள்ள, திருப்பி செலுத்தக்கூடிய திறன் உடைய விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதனால் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் கடன் வங்கிகளுக்கு திருப்பி செலுத்தப்படுகிறது. ஒரு நபர் ரே‌ஷன் அட்டையால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக அரிசிகள் வழங்குகிறோம். ஒரே நேரத்தில் 128 பேருக்கு பணி நியமனம் வழங்கியதில் எந்த தவறும் இல்லை. இதற்காக 8 பேர் கொண்ட வேலை வாய்ப்புக்குழு அமைக்கப்பட்டு முறையாக அனைத்து பணிகளும் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×