search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதல்-அமைசர் எடப்பாடி பழனிசாமி
    X
    தமிழக முதல்-அமைசர் எடப்பாடி பழனிசாமி

    மழை வெள்ள பாதிப்பு - நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.30 கோடி நிவாரணம் - முதல்வர் பழனிசாமி உத்தரவு

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.30 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்து முதல்-அமைசர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    கனமழை காரணமாக உண்டான வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக நீலகிரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் சேதம் அடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ.4,100 மற்றும் முழுமையாக சேதம் அடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் உடனடியாக நிவாரணம் வழங்கவும், முழுமையாக சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டம்

    சேதம் அடைந்த சாலைகள், சிறுபாலங்கள், மின் கம்பங்கள், மின் கம்பிகள் மற்றும் மின்மாற்றிகளை உடனடியாக மறுசீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட 55 இடங்களில், 31 இடங்கள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவழி போக்குவரத்துக்கு ஏதுவாக சீரமைக்கப்பட்ட 24 சாலைகளில், இரு வழி போக்குவரத்துக்கேற்ப சீரமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சேதம் அடைந்த தோட்டக்கலை பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணியை வருகிற 16-ந்தேதிக்குள் முடித்து, வேளாண் பெருமக்களுக்கு இடுபொருள் மானியம் வழங்க உரிய முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்துக்கு உடனடி நிவாரணத்துக்காக ரூ.30 கோடியை, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×