என் மலர்

  செய்திகள்

  புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி
  X
  புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி

  நாளை சுதந்திர தின விழா - புதுவை தலைவர்கள் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய திருநாட்டின் 73-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
  புதுச்சேரி:

  முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

  இந்திய திருநாட்டின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் எழுச்சியோடு கொண்டாடப்படும் இனிய தருணம் இது.

  எண்ணற்ற வீர மறவர்களின் உயிர்த்தியாகங்கள், செல்வந்தர்களாய் வாழ்ந்தவர்கள் நாட்டுக்காக செல்வங்களை எல்லாம் இழந்து, சிறையில் வாடிய கொடுமைகள், அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டு வாழ்நாளை இழந்த தியாக மறவர்கள் என்று நாம், நம் சுதந்திரத்துக்காக இழந்த தலைவர்கள் ஏராளம், ஏராளம். இத்தகையோரின் தியாகத்தினால்தான் நம் தேசிய கொடி இன்றளவும் பட்டொளி வீசி பறந்து கொண்டு இருக்கிறது.

  எனவே, நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளுக்கு நாம் கிஞ்சித்தும் இடம் கொடாது அவர்களை இனம் கண்டு விரட்டியடிக்க வேண்டும். இதுவே, நாம் இந்த சுதந்திர தினத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி ஆகும். அதுதான் நாட்டின், ஒற்றுமைக்காக தியாகம் செய்த தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

  வீர மறவர்களின் தியாகங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லுங்கள். சுதந்திர போராட்ட வரலாற்றினை நம் குழந்தைகளுக்கு எடுத்துரையுங்கள். அதுவே போராடி நாம் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் என்ற கோரிக்கையோடு புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

  என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி:- ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியாவின் 73-வது ஆண்டு சுதந்திர தினத்தையும், ஆகஸ்டு 16-ந்தேதி புதுவை மாநிலம் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய அரசுக்கு நிர்வாக மாற்றம் செய்ததையும் மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

  நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு உலகின் 2-வது பெரிய நாடாக இந்தியா திகழ்வதுடன் பல்வேறு துறைகளிலும் பல்வேறு முன்னேற்றம் காரணமாக நடுத்தர குடும்பங்களும் சுதந்திரத்தின் பலனை அடையத் தொடங்கி உள்ளனர். ஆயினும் கடைக்கோடி மனிதனுக்கும் சுகவாழ்வு என்று காந்தியடிகள் கண்ட கனவு நனவாகும் நாளே உண்மையான விடுதலை நாளாகும்.

  நமது நாடு முன்னேற்ற பாதையை முடுக்கி விட்டு, உலக நாடுகளில் உன்னத நாடாக இந்தியா திகழ அனைவரும் உறுதி ஏற்போம்.

  அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  அமைச்சர் நமச்சிவாயம்:- வாணிபம் செய்வதற்காக இந்தியாவுக்குள் நுழைந்து சூழ்ச்சி செய்து நம்மை ஆண்ட ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற மகாத்மா காந்தியடிகள் காங்கிரஸ் மகாசபையை உருவாக்கி அகிம்சை வழியில் போராடி அனைவரையும் ஒன்றிணைத்து நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தார்.

  சுதந்திர இந்தியா துரித வளர்ச்சி பெற பண்டித ஜவகர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு புரட்சிகர திட்டங்களை தீட்டி நாட்டை ஏற்றம் பெறச்செய்தது. இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை தீட்டி நாட்டின் அபரிமிதமான வளர்ச்சிக்கு வித்திட்டது.

  அன்னை இந்திராகாந்தி, அருமை தலைவர் ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், டாக்டர் மன்மோகன்சிங் போன்ற திறன் படைத்த தலைவர்களால் நம் நாடு வல்லரசு நாடுகளுக்கு இணையாக எழுச்சி பெறத் தொடங்கியது.

  ஆனால், இன்றோ மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் பிரிவினையை தூண்டி மக்களை மாய வலையில் சிக்க வைத்து ஆட்சியில் அமர்ந்து இருக்கின்ற மதவாத சக்திகள் சர்வாதிகார ஆட்சி நடத்தி நாட்டு மக்கள் அனைவரையும் அல்லல்படுத்தி வருகிறார்கள். தனி மனிதனுக்கு, மகளிருக்கு, சிறுமிகளுக்கு, பாதுகாப்பு இல்லாத அசாதாரணமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருவது மனவேதனையை தருகிறது.

  தங்கள் உயிர்களை தியாகம் செய்து அன்னியர்களுடன் போராடி சுதந்திரம் பெற்றுத்தந்த தியாக தலைவர்களின் லட்சியக் கனவுகளை நனவாக்க வரும் காலத்தில் காங்கிரஸ் பேரியக்கம் ஆட்சி அமைந்து இந்திய தேசம் ஏற்றம் பெற இந்நாளில் சூளுரைப்போம். அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அமைச்சர் ஷாஜகான்:- உலகமெங்கும் வாழும் என் பாரத தாய் திருநாட்டு மக்களுக்கு 73-வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

  தேசிய ஒருமைப்பாட்டு மதசார்பற்ற மனிதநேய கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை சகோதர சகவாழ்வு சமாதான கோட்பாடுகள் கொண்ட பாரத தேசத்தின் பெருமைகளை உணர்ந்து நாட்டின் இறையாண்மையை போற்றி பாதுகாக்க இந்தியர்களாகிய நாம் இந்த சுதந்திர தின நன்னாளில் உறுதி ஏற்போம்.

  அனந்தராமன் (அரசு கொறடா):- ஆங்கிலேயரின் பிடியில் இருந்த இந்திய தேசத்தை காக்க நமது விடுதலை வீரர்களும், தியாகிகளும் மண்ணில் செங்குருதி சிந்தி தன் இன்னுயிரை இழந்து சுதந்திரத்தை பெற்றுத்தந்த ஆகஸ்டு 15-ம் நாளை சுதந்திர தினமாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

  சுதந்திரத்துக்காக பாடுபட்ட நம் தேசத்தலைவர்கள் மற்றும் விடுதலை போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூருவதோடு அவர்கள் வகுத்த அன்பு, அகிம்சை, இரக்கம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொள்ள உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

  சாமிநாதன் எம்.எல்.ஏ:- பாரத மக்கள் அனைவரும் 73-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்த நாளானது நம் பாரதத்தின் 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று முழுக்க, முழுக்க ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண்களின் பாதுகாப்புக்காகவும் வழி செய்யும் வகை செய்யும் பொன்னாளாக உள்ளது.

  நம் பாரத மக்கள் சுதந்திரதின விழாவை கொண்டாடும் இந்த வேளையில் நம் நாட்டு சுதந்திரத்துக்காக அரும்பாடுபட்ட தேசத் தலைவர்களையும், சுதந்திர போராட்ட வீரர்களையும் மேலும் சுதந்திரத்துக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளையும் போற்றி வணங்குவோம்.

  கோகுலகிருஷ்ணன் எம்.பி.:- அன்னியர் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, இந்திய திருநாடு விடுதலை பெற்ற 73-வது சுதந்திர தினத்தை எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாட இருக்கிறோம்.

  பொருளாதாரத்தில் உலக நாடுகளுக்கு சவால் விட்டு முன்னேறி இருக்கிறோம். அறிவியலில் சிகரம் தொட்டு இருக்கிறோம். தகவல் தொழில்நுட்பத்துறையில் உலகையே பிரமிக்க வைத்து இருக்கிறோம்.

  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில், நம் நாட்டின் பொதுமக்கள் அனைவருக்கும் வாழ்க்கையின் முழு தேவைகளும் தங்கு தடையின்றி கிடைக்கும் நாள்தான் உண்மையான விடுதலை நாளாகும். அரசுகளும், அரசியலும் அதை நோக்கியே இயங்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

  Next Story
  ×