search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி
    X
    வீராணம் ஏரி

    சென்னையில் அடுத்தமாதம் முதல் குடிநீர் தட்டுப்பாடு சீராகும்

    வீராணம் ஏரி நீர், கிருஷ்ணா நீர் சேர்ந்து கிடைக்க இருப்பதால் சென்னை மக்களுக்கு கூடுதலாக தண்ணீர் சப்ளை செய்ய முடியும். இதனால் குடிநீர் பிரச்சினை அடுத்த மாதம் முதல் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னை நகரில் குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கிய பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஏரிகள் முழுவதும் வறண்டுவிட்டன. தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்று நீர் மற்றும் கல்குவாரி நீரை எடுத்து சப்ளை செய்து வருகிறார்கள்.

    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு குறைந்து உள்ளது. எனினும் தண்ணீருக்காக தினந்தோறும் காலி குடங்களுடன் டேங்கர் லாரிகளை எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள்.

    இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கேரளா, கர்நாடகாவில் பலத்த மழை கொட்டியது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.

    காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இதற்கிடையே சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மேட்டூர் அணை நீரை வீராணம் ஏரிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு திறக்கப்படும் தண்ணீர் கீழணைக்கு வந்துசேரும். பின்னர் அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும். இதைத் தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பப்படும்.

    வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி தற்போது ஏரியின் நீர்மட்டம் 39.40 அடியாக உள்ளது. சென்னை குடிநீருக்கு 28 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் பரவனாறு ஆற்றில் போடப்பட்டுள்ள போர்வெல் மற்றும் நெய்வேலி சுரங்க நீரும் சுத்திகரித்து சென்னைக்கு அனுப்பி வருகிறார்கள்.

    மேட்டூர் அணைநீர் அடுத்த மாதம் வீராணம் ஏரிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் கர்நாடகாவில் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை சென்னை குடிநீருக்காக ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா அணைக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் கண்டலேறு அணைக்கு வந்ததும் பின்னர் அங்கிருந்து பூண்டி ஏரிக்கு வந்தடையும். பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வந்தடைய ஒரு மாதம் ஆகும். இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நீர் கிடைக்கும்.

    வீராணம் ஏரி நீர், கிருஷ்ணா நீர் சேர்ந்து கிடைக்க இருப்பதால் சென்னை மக்களுக்கு கூடுதலாக தண்ணீர் சப்ளை செய்ய முடியும். இதனால் குடிநீர் பிரச்சினை அடுத்த மாதம் முதல் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராணம் தண்ணீர், கிருஷ்ணா தண்ணீரை சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

    Next Story
    ×