search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் முறையீடு

    சென்னை ஐகோர்ட்டில் அத்திவரதர் சிலையை மேலும் 48 நாட்களுக்கு தரிசனத்துக்காக வைக்கவேண்டும் என்று முறையிடப்பட்டது.
    சென்னை:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து எடுக்கப்படும் அத்தி வரதர் சிலையை கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வருகிற 17-ந்தேதி அத்தி வரதர் சிலை மீண்டும் தெப்பக்குளத்துக்குள் வைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் அத்திவரதர் சிலையை மேலும் 48 நாட்களுக்கு தரிசனத்துக்காக வைக்கவேண்டும் என்று முறையிடப்பட்டது.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.

    அப்போது மூத்த வக்கீல் பிரபாகரன் ஆஜராகி, ‘அத்தி வரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு மட்டுமே வெளியில் வைக்கப்படுகிறது.

    அத்தி வரதர்


    அப்போது பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். தற்போது 48 நாட்கள் முடிந்து வருகிற 17-ந்தேதி அத்தி வரதர் சிலையை மீண்டும் குளத்துக்குள் வைக்கப்போகின்றனர்.

    ஆனால், தமிழகத்தில் ஏராளமான பக்தர்கள் இந்த சிலையை தரிசனம் செய்ய முடியாமல் உள்ளனர். அவர்கள் தரிசனம் செய்ய ஆவலுடன் உள்ளனர்.

    வயதானவர்கள் இந்த முறை தரிசனம் செய்ய முடியவில்லை என்றால், அடுத்த 40 ஆண்டுகளுக்கு பின்னர் தரிசனம் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுகிறது.

    எனவே, அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து வழக்கு தொடர உள்ளேன். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று கூறினார்.

    அதற்கு நீதிபதி, இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
    Next Story
    ×