search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    திண்டுக்கல் அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் மாயம்

    திண்டுக்கல் அருகே விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபர் மாயமானதால் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 60). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு மங்களம் (54) என்ற மனைவியும், மார்க் யாகப்பன் (28), ஸ்டீபன் ஆபிரகாம் (26) என்ற மகன்களும் உள்ளனர்.

    இப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் புனித சந்தியாகப்பர் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக மார்க் யாகப்பன் தூத்துக்குடியில் இருந்து 100 கிலோ மீன்கள் வாங்கி வந்து விற்பனைக்கு கொண்டு வந்தார். இங்குள்ள சிலுவைத் திண்ணையில் வைத்து மீன்களை விற்றுக் கொண்டு இருந்த போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் யாகப்பன் கேட்காமல் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

    எனவே இது குறித்து அம்பாத்துரை போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மார்க் யாகப்பனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    யாகப்பன் விட்டுச் சென்ற மீன்கள் கடந்த 2 நாட்களாக அதே இடத்தில் கிடந்தது. வீட்டுக்கு யாகப்பன் வராததை கண்டு விசாரித்த போது போலீசார் அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதனால் இன்று யாகப்பனின் தாய் மங்களம், தம்பி ஸ்டீபன் ஆபிரகாம், அவரது மனைவி ஜெனீபர் ஆகியோர் கையில் பேனர் ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து அம்பாத்துரை போலீசார் அங்கு வந்து பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்திய மங்களம் உள்பட 3 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தெரிவிக்கையில், மார்க் யாகப்பன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. சம்பவத்தன்று பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மீன் விற்றுக் கொண்டு இருந்த யாகப்பனை போலீஸ் வேனில் ஏற்றி விசாரணைக்கு அழைத்து வந்தோம். ஆனால் வரும் வழியிலேயே அவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து திண்டுக்கல் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    Next Story
    ×