search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரமராஜா
    X
    விக்கிரமராஜா

    வணிகர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் போராட்டம்- விக்கிரமராஜா பேட்டி

    வணிகர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று திண்டுக்கல்லில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தின்15-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். பின்னர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. தடை சட்டம் என்ற பெயரில் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் அள்ளிச் செல்வது தவறானது. அரசு ஒரு சட்டம் போடும் பொழுது அதை ஆராய்ந்து முறைப்படுத்தி அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் வணிகர்களையும் கலந்து ஆலோசனை செய்து முடிவு செய்து இருக்க வேண்டும்.

    தமிழகஅரசு சாமானிய வியாபாரிகளை முடக்க கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை மறுநாள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இதனை தொடர்ந்து சென்னையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

    மத்திய அரசு நாடு தழுவிய அளவில் வணிகர் நல வாரியம் அமைத்துள்ளது. அதில் தமிழகத்தின் பிரதிநிதியை சேர்க்க வேண்டும். நாடு முழுவதும் வணிகர்களுக்கான ஓய்வு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் சட்டவிதிகளை மாற்றம் செய்ய வேண்டும்.

    இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். அப்போது பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என வணிகர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்படும். அதேபோல் தேஜஸ் விரைவு ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி ரெயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

    தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு புறம் தள்ளினால் நாளை மறுநாள் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு தமிழகம் முழுவதும் மாபெரும் காலவரையற்ற தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்படும்.

    பிளாஸ்டிக்

    பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம் பாலிதீன் பை போன்றவற்றை யார் உற்பத்தி செய்கிறார்கள் என்பது அரசாங்க அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால் அவர்களை அங்கே முடக்காமல் வியாபாரிகளை மிரட்டி கொண்டு பணம் வாங்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. மல்டி நே‌ஷனல் நிறுவனங்களில் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பைகளில் தான் வருகிறது. மத்திய அரசு தடை செய்யவில்லை. ஆனால் உள்நாட்டு வணிகர்களுக்கு தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×