search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் காத்திருந்த பயணிகள் கூட்டம்
    X
    சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் காத்திருந்த பயணிகள் கூட்டம்

    ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் - தெற்கு ரெயில்வே

    மழை வெள்ளத்தால் ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    கேரளா, மராட்டியம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல், போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளது. இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே கேரளா, மராட்டிய மாநிலத்துக்கு செல்லும் ரெயில்களை ரத்து செய்துள்ளது.

    இதனால் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் உள்பட தமிழகத்தில் இருந்து செல்லும் பல ரெயில்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதால், ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் விடுமுறை தினம் என்பதாலும் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளுக்கு உண்டான பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது என குழப்பம் அடைந்தனர்.

    இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கேரளா, மராட்டியம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களை பயணிகள் நலன் கருதி கடந்த 7-ந்தேதியில் இருந்து ரத்து செய்து வருகிறோம். ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்திருந்தால் அந்த டிக்கெட்டுக்கு உண்டான பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அதன்படி டிக்கெட் வைப்பு ரசீதை அந்தந்த ரெயில் நிலையங்களில் அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் கொடுத்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

    இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் எழுத்து பூர்வமாக கடிதத்தை எழுதி, அதனுடன் டிக்கெட் ரசீதை இணைத்து தலைமை வர்த்தக மேலாளர், பயணிகள் மேலாண்மை, தெற்கு ரெயில்வே, மூர்மார்க்கெட் வளாகம், சென்னை-600003, என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் அனுப்பி வைத்து அதற்குண்டான பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
    Next Story
    ×