search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    தக்கலையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 இடங்களில் கொள்ளை

    தக்கலையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தக்கலை:

    தக்கலையை அடுத்த பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் (வயது65). இவர் ஆலந்துறை பகுதியில் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார்.

    பின்னர் அவர் காலையில் அலுவலகத்திற்கு வந்தபோது அலுவலகத்தின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளேச் சென்று பார்த்தபோது அங்கு இருந்த மேஜையை உடைத்து அதில் இருந்த ரொக்க பணம் ரூ.15 ஆயிரத்து 800-யை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    மேலும் அவரது கடைக்கு அருகே கப்பிறையைச் சேர்ந்த ராமச்சந்திரன்(65) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். கொள்ளையர்கள் இந்த ஓட்டலின் மேல் கூறை ஓடுகளை பிரித்து உள்ளே சென்று அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.3 ஆயிரத்து 500யை கொள்ளையடித்து இருந்தனர்.

    அதே போல் அருகில் கஞ்சிகுழி பகுதியைச் சேர்ந்த டேவிட்ராஜ்(48) என்பவர் துணிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கு அலமாரியில் இருந்த ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம் மற்றும் புது துணிகளையும் அள்ளி சென்று உள்ளனர். இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    துணிக்கடை, ஓட்டல், பத்திரம் எழுதும் அலுவலகம் ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் கொள்ளையர்களின் 2 கைரேகைகள் சிக்கியது. அந்த கைரேகைகளை கொண்டு போலீசார் பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    தக்கலை காட்டாத்துறை வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாபா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷீபா(45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஷீபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நெய்யூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

    இந்த நிலையில் ஷீபாவின் வீடு திறந்து கிடந்தது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் ஷீபாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கொள்ளையர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் டி.வி., லேப்-டாப், ஹோம் தியேட்டர், உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணம் ரூ.2 ஆயிரம் மற்றும் மேஜையில் இருந்த ரூ.1 ஆயிரத்து 500 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம், மேஜை ஆகிய இடங்களில் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் கொள்ளையர்களின் 3 கைரேகைகள் சிக்கியது. இதனைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த ஷீபா வீட்டில் கார் கிடையாது. தற்போது மழை பெய்து வருவதால் ஷீபாவின் வீட்டின் வராண்டா வரை 4 சக்கர வாகனம் வந்துச் சென்றதற்கான தடம் பதிவாகி உள்ளது. எனவே கொள்ளையர்கள் வாகனத்தில் வந்து கொள்ளையடித்த பொருட்களை அதில் ஏற்றிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

    களியக்காவிளை தேவர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்ஜேக்கப் சிங்(44) இவர் நெல்லிவிளை பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு வீடு திரும்பினார். பின்னர் மறுநாள் கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மோகனஅய்யர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கடையை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த லேப்-டாப் மற்றும் கடையின் மேல் தளத்தை உடைத்து அங்கிருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இரணியல் ஆளுர் பகுதியைச் சேர்ந்தவர் இருசன்(62). இவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊருக்குச் சொந்தமான குத்துபோனி-1, வார்ப்பு-1, செம்பு வட்டம்-1 ஆகியவற்றை அருகில் உள்ள மண்டபத்தில் வைத்திருந்தோம். இந்த நிலையில் அந்த பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி பொருட்களை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×