search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுகளை வழங்கிய திருமாவளவன்
    X
    விருதுகளை வழங்கிய திருமாவளவன்

    6 பேருக்கு விடுதலை சிறுத்தை விருது- திருமாவளவன் வழங்கினார்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமையேற்ற கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. 6 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமையேற்ற கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. 6 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

    அம்பேத்கர் சுடர் விருது ‘இந்து’ என்.ராம், பெரியார் ஒளி விருது ஜி.விசுவநாதன், காமராசர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அயோத்தி தாசர் ஆதவன் விருது சமூக செயற்பாட்டாளர் மா.நாகப்பன், காயிதே மில்லத் பிறை விருது வரலாற்று ஆய்வாளர் செ.திவான், செம்மொழி ஞாயிறு விருது தொழில் அதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு திருமாவளவன் வழங்கினார். விருதுடன் ரூ.50 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டது.

    அவரவர் துறைகளில் உச்சம் தொட்டவர்கள் விடுதலை சிறுத்தைகள் அளித்த விருதினை பெற்று நம்மை பெருமைப்படுத்தியுள்ளனர். ஒருவரது பிறப்பு, நட்பு, தேவை அடிப்படையில் விருதானர்கள் தேர்வு செய்யப்படவில்லை. தலித்துகள் மேம்பாட்டுக்காக சிறப்பாக பங்களிப்பு செய்ததன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

    விடுதலை சிறுத்தையை பொது நீரோட்டத்தில் இணைப்பது ஜாதி ஒழிப்பு போராட்டத்தின் முதல்படி. பொது நீரோட்டத்தில் இணைந்தாலும் விடுதலை சிறுத்தையின் அடிப்படை கொள்கைகளில் இருந்து ஒரு போதும் விலக மாட்டோம்.

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை வரலாற்று உண்மை அறியாதவர்கள் வேண்டுமானால் கொண்டாடலாம்/ வரலாறு தெரிந்தவர்கள் கொண்டாட முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவுக்கு எதிராக அம்பேத்கர் எதுவும் கூறவில்லை. பவுத்தர்கள் அதிகம் வசிக்கும் லடாக், இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு என்று காஷ்மீரை மூன்றாக பிரிக்கலாம் என்று அப்போதே அம்பேத்கர் கூறினார்.

    முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரை இணைக்க பொது வாக்கெடுப்பு நடத்தலாம், இல்லையெனில் பிற்காலத்தில் பிரச்சனை வரும் என்று தான் அம்பேத்கர் கூறினார். காஷ்மீர் மக்களுக்கு நேரு அளித்த வாக்குறுதிக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டுள்ளது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

    அம்பேத்கர் சுடர் விருது பெற்ற ‘இந்து’ என். ராம் பேசியதாவது:-

    அம்பேத்கர் சுடர் விருது பெருவதில் பெருமை கொள்கிறேன். அம்பேத்கரின் வாழ்க்கை, படிப்பு, போராட்டம், வெற்றி, தோல்வி ஆகியவற்றை தெரிந்து கொள்வதில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்து வந்தது. ஜாதி ஒழிப்பு, தீண்டாமை கொடுமை போன்றவற்றை எதிர்ப்பதில் அம்பேத்கர் சமரசம் செய்து கொண்டதே இல்லை. அரசியல் ஜனநாயகத்தை, சமூக ஜனநாயகமாக மாற்றவில்லை என்றால் பலனில்லை என்றார்.

    அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் இருந்த தலைவர்களை விட அவரது புகழ்தான் மேலோங்கி உள்ளது. ஏனென்றால் கோடிக்கணக்கான மக்கள் அவரது கருத்துக்களின் பின்னால் இருக்கிறார்கள்.

    இளைஞர்களை ஈர்க்கக் கூடிய தலைவர்களை பார்ப்பது தற்போது அபூர்வமாக உள்ளது. எண்ணற்ற இளைஞர்களை கொண்ட இயக்கமாக விடுதலை சிறுத்தைகள் உள்ளது. இளைஞர்களை ஈர்க்கும் தலைவராக திருமாவளவன் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், மாநில நிர்வாகிகள் வன்னி அரசு, எஸ்.எஸ். பாலாஜி, பாவரசு, உஞ்சை அரசன், பாலசிங்கம், பாவலன், மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, வி.கோ. ஆதவன், இரா. செல்வம், மற்றும் வீரராஜேந்திரன், எழில் இமயன், கரிகால்வளவன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. வரவேற்றார். பொருளாளர் முகமது யூசுப் நன்றி கூறினார்.
    Next Story
    ×