search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனாதை பிணத்தை அடக்கம் செய்து பூப்போட்டு மரியாதை செலுத்தும் பெண் போலீஸ் ஏட்டு தேன்மொழி.
    X
    அனாதை பிணத்தை அடக்கம் செய்து பூப்போட்டு மரியாதை செலுத்தும் பெண் போலீஸ் ஏட்டு தேன்மொழி.

    மரித்த உயிர்களுக்காக மனிதநேயம்- அனாதை பிணங்களை சுடுகாட்டில் புதைத்த பெண் போலீஸ்

    அனாதை பிணங்களை திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் தன்னுடைய சொந்த முயற்சியில் அடக்கம் செய்து இறுதிச் சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    உயிரோடு இருக்கும் போது நம் தாய் தந்தையருக்கு கூட வேண்டியதை செய்வதற்கு பலருக்கு மனம் இருப்பதில்லை. திருமணம் முடிந்த பிறகு சில வருடங்களிலேயே பெற்றோரை அனாதையாக தெருவில் விடும் குழந்தைகளும் இந்த காலத்தில் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்காகவே அனாதை இல்லங்களும் சாலையோர நடைபாதை குடைகளும் அமைக்கப்பட்டது போலவே உள்ளது.

    வயதானவர்கள் மட்டுமின்றி தங்களை கவனிக்க யாரும் இல்லை என்ற நிலையில் உள்ள வறியவர்களும் இன்றும் தெருவில் நடமாடுவதையும், ஓட்டல் மற்றும் உணவகங்களில் வீசி எறியப்படும் எச்சில் இலைகளில் கிடக்கும் உணவுகளை உண்டு காலம் கடத்துவதையும் நம் கண்ணால் தினசரி கண்டு வருகிறோம். இவர்கள் வாழும் போதே இந்த நிலை என்றால் இறந்த பிறகு அவர்களை யார் அடக்கம் செய்வது? என யாரும் நினைத்து பார்ப்பது இல்லை.

    பெரும்பாலும் இது போன்றவர்கள் அனாதை பிணங்கள் என அடையாளம் காட்டப்பட்டு மாநகராட்சி மற்றும் துப்புரவு பணியாளர்களால் அப்புறப்படுத்தப்படும். இது போன்று ஜீவனம் செய்யும் நபர்களை நாம் ஒவ்வொரு நாளும் கடந்து வருகிறோம்.

    ஆனால் அவர்களுக்கு கருணை காட்ட அரசு சமூக நலத்துறை மூலமும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் கைவிடப்பட்டோரை முற்றிலும் காப்பாற்ற முடியாத நிலை இன்றும் தொடர்கிறது.

    ஆனால் இது போன்ற அனாதை பிணங்களை திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் தன்னுடைய சொந்த முயற்சியில் அடக்கம் செய்து இறுதிச் சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் நாகல்நகர் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் அருகே கடந்த 2-ந் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். நகர் தெற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி, தலைமைக் காவலர் தேன்மொழி ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். 3 நாட்களாக யாரும் அவரை தேடி வராததால் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு காவல் துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    உடலை யாரும் வாங்க வராததால் தேன்மொழி தானே தனது சொந்த முயற்சியில் அவரது உடலை வேடப்பட்டியில் உள்ள மயானத்துக்கு கொண்டு வந்தார். பின்னர் அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்து உடலை புதைத்தார். பெண் போலீஸ் ஒருவர் மேற்கொண்ட இந்த செயல் அப்பகுதி மக்களை பெரிதும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

    அடக்கம் செய்யப்படும் உடல்

    இது குறித்து போலீஸ் ஏட்டு தேன்மொழி தெரிவிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் மேலை சிவபுரி எனது சொந்த ஊர் ஆகும். எனக்கு திருமணமாகி சுப்பிரமணியன் என்ற கணவரும், முகுந்தன் (வயது 11), லக்‌ஷனா சோனாட்ஷி (7) என்ற குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் சிறுமலையில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2003-ம் ஆண்டு நான் போலீஸ் வேலைக்கு வந்தேன். வேலைக்கு சேரும் போதே எனக்கு தெரியும் இது மிகவும் கடினமான வேலை என்று.

    இங்கு ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் சமமான பணியே உள்ளது. எனவே இதனை நான் தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொண்ட பணி.

    சிறுவயது முதல் சாலையோரம் சுற்றித் திரியும் கைவிடப்பட்டவர்களை நினைக்கும் போது மனதில் லேசான வலி ஏற்படும். பின்னர் இவர்களே அனாதை பிணங்களாக மாறுவதை பார்க்கும் போது அந்த வலி மேலும் அதிகரிக்கும். போலீஸ் துறை என்பதால் தினசரி விபத்து, கொலை போன்ற சம்பவங்களை பார்க்கும் போது அதில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருகிறோம்.

    அப்போது அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்ப வேண்டியது போலீசாரின் கடமை. அதைப் போலவே அனாதையாக கிடந்தவரின் உடலையும் எடுத்து நான் அடக்கம் செய்தேன். கடந்த 1 மாதத்துக்கு முன்பு இதே போல ஒரு அனாதை பிணத்தை எடுத்து புதைத்தபோது எனக்கு ஒரு வித உறுத்தல் ஏற்பட்டது. முதல் முறையாக சுடுகாட்டுக்கு சென்று காரியங்கள் செய்த நிகழ்வு குறித்து எனது கணவரிடம் தெரிவித்தேன். அவரும் என்னை பாராட்டினார். ஆனால் 2-வது முறையாக அனாதை பிணத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்த போது எந்தவித பாதிப்பும் தெரியவில்லை.

    அடுத்தடுத்து பணிகளுக்காக சென்று விடுவதால் இதுவும் கடந்து போகும் என்ற மனப்பக்குவம் வந்து விடுகிறது. சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒதுக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதை விட நம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தாங்கள் வாழும் காலத்திலேயே அவர்களை நல்ல முறையில் வைத்திருந்தாலே இது போன்ற நிலை யாருக்கும் வராது. ஏன் என்றால் நாமும் ஒரு நாள் இதே நிலைக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்பதை உணர வேண்டும் என்று தெரிவித்தார்.

    பெண்களுக்கு சமஉரிமை என்பது இன்றும் கூட பல வி‌ஷயங்களில் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. சில கோவில்களுக்குள் செல்லக்கூடாது, சில கடவுளை வணங்கக்கூடாது, சில இடங்களுக்கு செல்லக்கூடாது என பெண்களுக்கான கட்டுப்பாடுகள் இன்றும் நீடித்துகொண்டுதான் இருக்கிறது. சுடுகாட்டிற்கு வரவோ, பெண்கள் இறுதிச்சடங்குகள் செய்வதையோ, பிணத்தை சுமந்து செல்வதையோ, ஊர்வலத்தில் கலந்து கொள்வதை பழங்காலம் முதலே அனுமதிக்கப்படுவதில்லை. புராணகாலங்களில் பெண்கள் இறுதிச்சடங்குகளில் அனுமதிக்கப்பட்டுத்தான் கொண்டிருந்தார்கள். மகாபாரத போரில் இறந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்த போது பாஞ்சாலி, குந்தி முதற்கொண்டு அனைத்து பெண்களும் அங்கிருந்ததாகத்தான் கூறப்படுகிறது. பீ‌ஷமரின் இறுதிச்சடங்கின் போது பாண்டவர் மற்றும் கவுரவர் இருபுறத்திலும் இருந்த அனைத்து பெண்களும் கலந்து கொண்டனர். இன்றைய சமூக சூழலில் தைரியமாக சுடுகாட்டிற்கு சென்று அனாதை பிணங்களை அடக்கம் செய்து மரியாதை செய்யும் போலீஸ் எட்டு தேன்மொழியின் இந்த முயற்சியை சமூக ஊடகங்கள் வெகுவாக பாராட்டி வருகின்றன.
    Next Story
    ×