search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரசை குறை சொல்வதா?- வைகோவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

    காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியில் இருந்து கொண்டு, அரசியல் நாகரீகம் இன்றி காங்கிரசை விமர்சிப்பதாக வைகோவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசமைப்பு சட்ட பிரிவு 370 ஐ ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் முன் அறிவிப்பின்றி உள்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதை காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

    அண்ணாவின் வழியில் வந்ததாக கூறுகிற வைகோ, கூட்டாட்சி தத்துவத்திற்கு உலை வைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்ப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக குற்றம் சாட்டி பேசினார்.

    இப்படி பேசுவதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாக கருதப்படுகிறது. நீண்டநெடிய பாராளுமன்ற அனுபவம் கொண்ட வைகோ, கருத்துக்களை வெளிப்படுத்துவதை விட, உரக்க குரல் எழுப்புவதன் மூலம் நிதானத்தையும், பக்குவத்தையும் இழந்திருப்பதை காண முடிகிறது. ஏதோ ஒரு வகையில் அவருக்கு ஆத்திரமும், காழ்ப்புணர்ச்சியும் இருப்பதை அவரது பேச்சு உணர்த்துகிறது.

    வைகோ

    தெருமுனையில் மேடை போட்டு மைக் பிடித்து ஆவேசமாக கத்துவது போல, பாராளுமன்றத்தில் கத்தி பேசுகிறார். எச்சரிக்கிறேன் என்பது போலவும், சாபம் தருவது போலவும் பேசுகிறார். வைகோ பேசிய போது பிரதமர் மோடியே கை தட்டினாராம், ரசித்தாராம். வைகோ எதை எதிர் பார்த்தாரோ, அது நடந்திருக்கிறது.

    காஷ்மீர் பிரச்சனையில் வைகோ பேச எடுத்துக் கொண்ட நேரத்தில் பெரும் பகுதியை காங்கிரசை தாக்குவதிலேயே கவனமாக இருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான பிறகு வைகோவிடம் நிறைய மாற்றங்களை காண முடிகிறது. சுப்பிரமணிய சுவாமியை சந்திக்கிறார், மோடியை சந்திக்கிறார், பா.ஜ.க.வின் தலைவர்களை சந்திக்கிறார்.

    பா.ஜ.க.வின் ஆதரவாளர் என்று முத்திரையை தவிர்ப்பதற்காக டாக்டர் மன்மோகன்சிங்கையும் சந்திக்கிறார். இதன்மூலம் வைகோ அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஓர் பச்சோந்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    வைகோவின் அரசியல் பாதையை கூர்ந்து கவனிப்பவர்கள் அவர் யாருக்குமே விசுவாசமாக இருந்ததில்லை. 18 ஆண்டு காலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து அழகு பார்த்த தி.மு.க.வுக்கு பச்சை துரோகம் செய்தவர், கலைஞருக்காக உயிரை விடுவேன் என்று கர்ஜித்த வைகோ, அவரது முதுகில் பலமுறை குத்தியிருக்கிறார்.

    ஆனால், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அவரை வேலூர் சிறையில் சென்று சந்தித்து தமது கூட்டணியில் இணைத்துக் கொண்ட கலைஞரின் பெருந்தன்மை எங்கே? வைகோவின் சிறுமைத்தனம் எங்கே?

    காஷ்மீர் வி‌ஷயத்தில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ் என்கிறார். இதைத் தான் பா.ஜ.க.வும் சொல்கிறது. தத்துவ இயலில் ஒரு வாதம் உண்டு. தீவிர இடதுசாரிகளும், வலது சாரிகளும் வெவ்வேறாக காட்சி அளிப்பார்கள். ஆனால் ஒரே விதமாக பேசுவார்கள். அதைத் தான் மோடியும், வைகோவும் செய்து கொண்டிருக்கிறார்கள். நேருவினுடைய மிக உறுதியான லட்சிய நோக்கினாலும், நடவடிக்கையினாலும் தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. இல்லையேல் ஜின்னாவின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானோடு இணைந்திருக்கும். காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் வைகோ, என்ன துரோகம் செய்தது என்று சொன்னால் பதில் கூற தயாராக இருக்கிறோம்.

    அண்ணாவின் பெயரை மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்குகிற வைகோ, காஷ்மீர் மாநிலத்தில் சுயாட்சியை பறிக்கிற பா.ஜ.க.வின் சதி திட்டத்திற்கு துணை போகலாமா ? இதைவிட அண்ணாவின் கொள்கைக்கு வைகோ என்ன துரோகம் செய்துவிட முடியும் ? தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறது.

    வைகோ விமர்சிப்பதை எதிர்த்து நூறு உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் விமர்சனம் செய்து தோலுரித்துக் காட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வைகோவுக்கு எதிரி பா.ஜ.க.வா? காங்கிரசா? காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரசை விமர்சிக்கிற அரசியல் நாகரீகமற்ற வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×