search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம் மணிகண்டன்
    X
    எம் மணிகண்டன்

    தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் திடீர் நீக்கம்

    தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் எம்.மணிகண்டனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று நீக்கினார்.
    சென்னை :

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப துறை இலாகாவை கவனித்து வந்தவர் எம்.மணிகண்டன்.

    டாக்டரான இவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆன இவரை ஜெயலலிதா அமைச்சராக நியமித்து, அவருக்கு தகவல் தொழில்நுட்ப இலாகாவை வழங்கினார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையிலும் மணிகண்டன் இடம்பெற்று இருந்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசிலும் மணிகண்டன் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்து வந்தார்.

    இந்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நேற்று திடீரென்று நீக்கப்பட்டார்.

    இதுகுறித்து கவர்னர் மாளிகை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சரவையின் பரிந்துரையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொண்டார்.

    மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின்படி, தகவல் தொழில்நுட்ப இலாகா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. எனவே ஆர்.பி.உதயகுமார், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி

    மணிகண்டன் நேற்று காலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேபிள் கட்டணம், டிஜிட்டல் உரிமம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வசைபாடினார். அத்துடன், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனையும் குற்றம்சாட்டி பேசினார்.

    இதன் காரணமாகவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    மணிகண்டன், அ.தி.மு.க. மாநில மருத்துவ அணி துணைச் செயலாளராக உள்ளார். இவருடைய மனைவி வசந்தி டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    மணிகண்டனின் தந்தை சேனா முருகேசன் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசில் பதவியை இழக்கும் 2-வது அமைச்சர் மணிகண்டன் ஆவார். ஏற்கனவே குற்ற வழக்கு ஒன்றில் தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி, விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×