search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலி
    X
    பலி

    தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி பெண் பலி

    தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குண்டுகோட்டையை அடுத்துள்ள ஏணிபண்டா கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி சின்னம்மா (வயது39). இவர் சொந்தமாக மாடுகள் வளர்த்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று சின்னம்மா மேய்ச்சலுக்காக மாடுகளை அவிழ்த்து கொண்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒசஅள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மாடுகளை மேய்த்து விட்டு வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    அப்போது அதில் ஒரு கன்றுக்குட்டி மட்டும் காணவில்லை. இதனால் மாடு மேய்த்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று கன்றுக்குட்டியை தேடி பார்த்தார்.

    அப்போது ஒசஅள்ளி முனியப்பன் கோவில் அருகே சுற்றி திரிந்த ஒற்றை யானையை பார்த்து சின்னம்மா அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். இதனை பார்த்த ஒற்றை யானை விரட்டி கொண்டு சின்னம்மாவை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கன்றுக்குட்டியை தேடி கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்ற சின்னம்மா வீடு திரும்பாததால் உறவினர்கள் வனப்பகுதிக்கு சென்று தேடி பார்த்தனர். அப்போது அங்கு முனியப்பன்கோவில் அருகே சின்னம்மா யானை தாக்கி பிணமாக கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அஞ்செட்டி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனவர் ரவி தலைமையில் வனவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஒற்றை யானையை விரட்டினர்.

    இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானை தாக்கி பலியான சின்னம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×