search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியர் தீரனுக்கு டாக்டர் ராமதாஸ் பொன்னாடை போர்த்தியபோது எடுத்த படம்.
    X
    பேராசிரியர் தீரனுக்கு டாக்டர் ராமதாஸ் பொன்னாடை போர்த்தியபோது எடுத்த படம்.

    டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பேராசிரியர் தீரன் பா.ம.க.வில் இணைந்தார்

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பேராசிரியர் தீரன் இன்று பா.ம.க.வில் மீண்டும் இணைந்தார்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் தலைவராக இருந்த பேராசிரியர் தீரன் சில ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. வில் சேர்ந்தார். அந்த கட்சியில் செய்தி தொடர்பாளராக இருந்த பேராசிரியர் தீரன் கடந்த 6 மாதத்துக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதையடுத்து திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பேராசிரியர் தீரன் இன்று பா.ம.க.வில் மீண்டும் இணைந்தார்.

    இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வன்னியர் சங்கம், பா.ம.க. கட்சி தொடங்க காரணமாக என்னோடு இருந்து போட்டிபோட்டு உழைத்தவர் பேராசிரியர் தீரன். இவரது சிந்தனை, கட்டுரைகள், பேச்சுகள் வாயிலாக வன்னியர் சங்கம், பா.ம.க. வளர்ந்தது.

    இவரது நீண்டபேச்சை எப்போதும் இளைஞர்கள் ரசிப்பார்கள். பா.ம.க. கட்சி தொடங்கியபோது பா.ம.க.வின் முதல் தலைவராக தீரன் தான் இருந்தார். காலம் எங்களை பிரித்தது. தற்போது அதே காலம்தான் ஒன்று சேர்த்துள்ளது.

    என்னுடன் 30 ஆண்டுகாலம் பயணித்தவர் தீரன். மீண்டும் இணைந்தபோது பிரிந்தவர் கூடும்போது பேசவும் வார்த்தை இல்லை என்ற நிலையில் தான் நான் இருந்தேன். இனி வரும் காலங்களில் எங்களை பிரிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேராசிரியர் தீரன் கூறியதாவது:-

    பா.ம.க.வில் மீண்டும் இணைவது ஒரு பெண் தனது பிறந்த வீட்டுக்கு வந்தால் எப்படி மகிழ்ச்சி அடைவாளோ? அதேபோல்தான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நான் பணியாற்ற வேண்டிய இடம் பா.ம.க.தான் என உறுதி செய்து இங்கு இணைந்துள்ளேன். எத்தனை கட்சிகள் இருந்தாலும் பா.ம.க. உன்னதமான போராட்ட இயக்கமாகும்.

    தற்போது உள்ள தமிழகத்தில் அரசியல் சூழ்நிலையில் சரியான தலைவர் டாக்டர் ராமதாஸ்தான். அவரை தந்தை பெரியார் இடத்தில் வைத்து நான் பார்க்கிறேன். பா.ம.க. இளைஞரணியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசை முதல்வர் ஆக்குவோம் என்ற லட்சியத்தோடு எனது செயல்பாடு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    Next Story
    ×