search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    தர்மபுரி அருகே கார்கள் மோதல்- 4 பேர் பலி

    தர்மபுரி அருகே கார்கள் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வசித்தவர் திருமூர்த்தி (வயது 45). மருந்து கடை உரிமையாளரான இவருக்கு லதா (41) என்ற மனைவியும், நிதிஷ் அபிநவ் (13) என்ற மகனும், வேதரித்திகா (6)என்ற மகளும் உள்ளனர்.

    லதா எட்டி கொட்டாய் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    நேற்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு விடுமுறை நாள் என்பதால் அதியமான்கோட்டை அருகே கொட்டாவூரில் உள்ள உறவினர் அல்லிமுத்து என்பவரின் வீட்டிற்கு திருமூர்த்தி தனது மனைவி மற்றும் குழந்தைகள் 2 பேரையும் காரில் அழைத்து வந்தார்.

    பின்னர் இரவில் திருமூர்த்தி தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு காரில் பென்னாகரத்துக்கு புறப்பட்டார். அப்போது அவர்களுடன் அல்லி முத்துவின் மகளான அபிநயா கீர்த்தி (10) என்ற சிறுமியையும் உடன் அழைத்து சென்றார்.

    நேற்று இரவு 10 மணியளவில் இண்டூரில் உள்ள மல்லாபுரம் பகுதி அருகே கார் வந்தபோது எதிரே ஒகேனக்கல்லில் இருந்து தர்மபுரியை நோக்கி வந்த மற்றொரு கார் திருமூர்த்தி ஓட்டி வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

    2 கார்கள் மோதிக் கொண்டதில் இடிபாடுகளில் திருமூர்த்தி, லதா, நிதிஷ் அபிநவ், வேத ரித்திகா, அபிநயா கீர்த்தியும், மற்றொரு காரில் வந்த வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த விவேக் (39), பண்டஅள்ளியைச் சேர்ந்த ரத்தினவேல் (40), புலிக்கரையைச் சேர்ந்த சரவணன்(40), பூகானஅள்ளி பிரகாஷ் (37) ஆகியோர் 9 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற திருமூர்த்தி, நிதிஷ் அபிநவ், லதா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். நள்ளிரவில் அபிநயா கீர்த்தியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். காயமடைந்த மற்ற 5 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, லதா, நிதிஷ் அபிநவ், மற்றும் உறவினர் மகள் அபிநயா கீர்த்தி ஆகிய 4 பேரும் விபத்தில் இறந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு உடனே திரண்டு வந்தனர். அவர்கள் பிணமாக கிடந்த 4 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த இண்டூர் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விபத்தில் இறந்து போன 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கான காரணம் என்ன? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 4 பேரும் விபத்தில் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    Next Story
    ×