search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் இரட்டை கொலை
    X
    கரூர் இரட்டை கொலை

    இரட்டை கொலை: கோவிலை இடிக்க நடவடிக்கை எடுத்ததால் கொலை நடந்ததா? போலீசார் விசாரணை

    கரூர் அருகே கோவிலை இடிக்க நடவடிக்கை எடுத்ததால் தந்தை, மகன் கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா முதலைப்பட்டியை சேர்ந்தவர் வீரமலை (வயது 70), சமூக ஆர்வலர். இவரது மகன் நல்லதம்பி (45), விவசாயி. கடந்த 29-ந் தேதி தந்தை-மகன் இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இது குறித்து குளித்தலை போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் குளித்தலை முதலைப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குளத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதற்கு வீரமலையும், அவரது மகன் நல்லதம்பியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏரியை மீட்க கோரி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏரியை மீட்க உத்தரவிட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஏரியை முழுமையாக மீட் கும் நடவடிக்கைகள் தீவிரமானது. இது ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் எதிராளிகள் வீரமலை, நல்லதம்பியை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கொலையாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், கொலையில் தொடர்புடைய முதலைப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்ற சவுந்தரராஜன், சண்முகம், பிரபாகரன், கவியரசன், சசிகுமார், ஸ்டாலின் ஆகிய 6 பேரும் மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதனிடையே நேற்று முன்தினம் திருச்சி கோர்ட்டில் பீரவீன்குமார் என்பவர் சரணடைந்தார். கொலையில் முக்கிய குற்றவாளியான ஜெயகாந்தன் என்பவரை நேற்று மதுரையில் வைத்து தனிப்படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், நெப்போலியன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் கைது செய்தனர். இன்று காலை அவரை குளித்தலை ஜே.எம்.2 கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரைநீதிபதி பாக்கியராஜ், வருகிற 16-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் குளம் ஆக்கிரமிப்பை தடுத்த தந்தை -மகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகளின் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் தாமாக முன்வந்து வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், முதலைப்பட்டியில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் வீரமலையும், அவருடைய மகன் நல்லதம்பியும் கொல்லப்பட்டுள்ளனர்.

    எனவே அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவும், குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிடவேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி ஆகியோர் கூறுகையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் தந்தை-மகன் கொலை தொடர்பாக இதுவரை போலீசார் எடுத்துள்ள நட வடிக்கைகள் குறித்து குளித்தலை டி.எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    அதேபோல முதலைப்பட்டியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

    தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், முதலைப்பட்டி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை இடிக்கும்படியும் வீரமலை, நல்ல தம்பி வழக்கு தொடர்ந்ததால் கூட இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம். எனவே அது குறித்தும் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றனர். அதன்படி போலீசார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    குளித்தலை முதலைப்பட்டி குளம் மொத்தம் 197 ஏக்கர் 43 சென்ட் பரப்பளவு கொண்டது. அதில் 37 ஏக்கர் பரப்பளவை 50-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதற்காக முறைகேடாக பட்டாவும் பெற்று நெல், வாழை ஆகியவற்றை பயிரிட் டுள்ளனர்.

    இதன் காரணமாக மழை நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் குடிநீர் ஆதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குளத்தின் கரையில் அங்காளம்மன் கோவிலும் உள்ளது. அந்த கோவில் ஆக்கிரமிப்பு பகுதியில் அமைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. கோர்ட்டு உத்தரவு காரணமாக முதலைப்பட்டி ஏரியின் அசல் பரப்பளவு எவ்வளவு, அதன் பரப்பளவு குறைந்த தற்கான காரணம் என்ன? அங்கு பொது ஆக்கிரமிப்பு எவ்வளவு உள்ளது. தற்போதைய ஆக்கிரமிப்பாளர் எத்தனை பேர் என்று அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்த தொடங்கினர்.

    ஆக்கிரமிப்பு பகுதியில் கோவில் வருவதால் கோவிலை அதிகாரிகள் இடித்து விடுவார்களோ? என்ற அச்சம் ஆக்கிரமிப்பாளர்கள் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால் தந்தை -மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே இந்த கொலை சம்பவத்தில் முழுமையான விவரங்களை அறிய கொலை வழக்கில் கைதான ஜெயகாந்தன் மற்றும் கோர்ட்டில் சரணடைந்த 7 பேரை காவலில் எடுத்து விசாரிக்க குளித்தலை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். காவலில் எடுத்து விசாரிக்கப்படும் பட்சத்தில் தந்தை-மகன் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. அதில் தொடர்புடைய மேலும் சிலரும் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது.

    இந்த கொலை சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தாததாலும், கொலையாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் புகார் எழுந்த காரணத்தால் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரை, சஸ்பெண்டு செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள் ளனர்.

    குளம் ஆக்கிரமிப்பை தடுத்த தந்தை-மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளதால் இரட்டைக் கொலை சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
    Next Story
    ×