search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிபத்து ஏற்பட்ட பிஎஸ்என்எல் அலுவலகம்
    X
    தீவிபத்து ஏற்பட்ட பிஎஸ்என்எல் அலுவலகம்

    பாரிமுனை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து- இன்டர்நெட், செல்போன் சேவை பாதிப்பு

    சென்னை மண்ணடியில் அமைந்துள்ள பி எஸ் என் எல் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    ராயபுரம்:

    பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி நிறுவனத்தின் எக்ஞ்சேஞ்ச் பாரிமுனை மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ளது. 5 மாடி சொந்த கட்டிடத்தில் இயங்கும் எக்ஞ்சேஞ்சுடன் அலுவலகம் செயல்படுகிறது.

    அங்கிருந்து வடசென்னை பகுதிகளுக்கு டெலிபோன், செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவை ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த மெயின் இணைப்பகத்தின் அலுவலகத்தில் இன்று அதிகாலை 5 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. முதல் மாடியில் இருந்து புகை வருவதை பார்த்த காவலாளி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    ஐகோர்ட்டு, எஸ்பிளனேடு ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் மேல் தளத்திற்கும் பரவியது. பூட்டப்பட்டு இருந்த அலுவலகத்துக்குள் இருந்து புகை வெளியேறியது.

    தீ கட்டிடத்தின் நாலா பகுதியிலும் பரவி அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்க சிரமப்பட்டனர்.

    பின்னர் பல்வேறு பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வண்டியில் இருந்து வந்த 80-க்கும் மேற்பட்ட வீரர்கள் முதல் மாடிக்குள் அழைத்து சென்று தீயை அணைத்தனர். டெலிபோன் இணைப்பகத்தில் உள்ள மின்னணு சாதனங்கள் தீயில் சேதம் அடைந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    தீ மற்ற தளங்களுக்கு பரவாமல் தடுக்க ‘ஸ்கை லிப்ட்’ வரவழைக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து தளங்களிலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

    ஆனாலும் டெலிபோன் அலுவலகத்தில் இருந்து புகை வந்து கொண்டே இருந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கண் எரிச்சலும், புகை மண்டலமாக காணப்பட்டது.

    வணிக வளாகங்கள் நிறைந்த அந்த பகுதியில் அடுத்தடுத்து தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தீ விபத்து ஏற்பட்டுள்ள பி.எஸ்.என்.எல். இணைப்பகத்துக்கு உடனடியாக அதிகாரிகள் வந்தனர். தீயில் என்னென்ன பொருட்கள் சேதம் அடைந்தன என்பதை உடனடியாக கணிக்க முடியவில்லை.

    ஆனாலும் இந்த அலுவலகத்தில் தான் பல்வேறு சர்வர்கள் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சென்னை தொலைபேசியின் முக்கிய இணைப்பகமாக உள்ள இந்த அலுவலகம் தீ விபத்தில் சிக்கி இருப்பதால் முக்கியமான உபகரணங்கள் தீயில் கருகி நாசமாகி இருக்கும் என்று தெரிகிறது.

    புகை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டால் தான் சேத மதிப்புகள், பாதிப்புகள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த விபத்தால் வட சென்னை பகுதியில் பல இடங்களில் செல்போன் சேவை, டெலிபோன் மற்றும் இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வித உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

    தீயணைப்புத்துறை வடக்கு மண்டல இயக்குனர் சாகுல்அமீது தலைமையில் வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பொது மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் துணை கமி‌ஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர்கள் லட்சுமணன், விஜயராகவன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×