search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீசைலம் அணை
    X
    ஸ்ரீசைலம் அணை

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஸ்ரீசைலம் அணைக்கு நீர்வரத்து

    கிருஷ்ணா நதியில் தண்ணீர் வருவது தொடர்ந்து நீடித்தால் ஸ்ரீசைலம் அணையில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்கு வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    சென்னை நகரம் தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் தத்தளித்து வருகிறது.

    சென்னைக்கு ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டுவரும் தெலுங்கு - கங்கை திட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இதன்படி ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா, கண்டலேறு அணைகள் வழியாக சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படும். ஆனால் தற்போது ஸ்ரீசைலம், சோமசீலா, கண்டலேறு அணைகளில் போதிய தண்ணீர் இல்லை. எனவே சென்னைக்கு குடிநீர் வழங்கவில்லை.

    இந்த நிலையில் ஸ்ரீசைலம் அணைக்கு கிருஷ்ணா ஆற்றில் இருந்து இப்போது தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஸ்ரீசைலம் அணைக்கு மேல் பகுதியில் ஜுருலா, நாராயண்பூர், அலமாட்டி ஆகிய அணைகள் உள்ளன.

    இந்த அணைகளுக்கு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தண்ணீர் வரும். தற்போது அலமாட்டி, நாராயணன்பூர் அணைகள் நிரம்பி உள்ளன. அங்கிருந்து ஒரு லட்சத்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஜுருலா அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கிளை நதிகள் மூலமாகவும் அங்கு தண்ணீர் அதிகமாக வருகிறது.

    இதனால் இன்று இரவுக்குள் ஜுருலா அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட இருக்கிறது. இதன் காரணமாக ஸ்ரீசைலம் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும்.

    தற்போது கிருஷ்ணா நதியில் தண்ணீர் வருவது போல் தொடர்ந்து நீடித்தால் ஸ்ரீசைலம் அணையில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அனுப்பப்படும் தண்ணீர் சோமசீலா, கண்டலேறு அணைகள் வழியாக சென்னைக்கு வர வேண்டும்.

    ஆனால் அந்த அணைகளில் நீர்மட்டம் மிக குறைவாக இருப்பதால் சென்னைக்கு தண்ணீர் வருவது சற்று தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×