search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்யபிரத சாகு
    X
    சத்யபிரத சாகு

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் கூடுதல் வாக்காளர் சேர்ப்பு - சத்யபிரத சாகு தகவல்

    வேலூர் பாராளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே 10 கம்பெனி துணை ராணுவப்படைக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. நாங்கள் கூடுதலாக 10 கம்பெனி கேட்டிருந்தோம். தற்போது 19 கம்பெனி துணை ராணுவப்படையினர் வேலூர் வந்துள்ளனர். மீதமுள்ள ஒரு கம்பெனி இன்று வரும்.

    19 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஆகஸ்டு 5-ந் தேதி தேர்தல் முடியும் வரை பணியில் இருப்பார்கள். மீதமுள்ள துணை ராணுவத்தினர், வாக்கு எண்ணிக்கைக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, ஆகஸ்டு 10-ந் தேதி வரை வேலூரில் பணியாற்றுவார்கள். துணை ராணுவத்தினர் தற்போது பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுவில் பணியமர்த்தப்படுவார்கள்.

    வாக்குப்பதிவு நடக்கும்போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிக துணை ராணுவத்தினர் பணியில் இருப்பார்கள். அவர்களின் பணிபற்றி வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் முடிவெடுப்பார்கள்.

    தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை வருமான வரித்துறையினர் ரூ.27 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். அந்த தொகை உள்பட ரூ.3 கோடியே 44 லட்சம், ரூ.89 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 980 கிராம் தங்கம், ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 19 ஆயிரத்து 438 லிட்டர் மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    வேலூர் தொகுதியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியது, சுவர் விளம்பரம் செய்தது தொடர்பாக 44 வழக்குகள் பதிவாகியுள்ளன.

    ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதியன்று, 6 லட்சத்து 98 ஆயிரத்து 644 ஆண்கள், 7 லட்சத்து 28 ஆயிரத்து 245 பெண்கள் மற்றும் 102 மூன்றாம் பாலினத்தவர் என 14 லட்சத்து 26 ஆயிரத்து 991 வாக்காளர்கள் இருந்தனர். அதைத் தொடர்ந்து 2 ஆயிரத்து 755 ஆண்கள், 2 ஆயிரத்து 901 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் என 5 ஆயிரத்து 659 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

    இரட்டை பதிவு, இறப்பு ஆகிய காரணங்களுக்காக 48 ஆண்கள், 47 பெண்கள் என 95 பேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி தற்போது, 7 லட்சத்து ஆயிரத்து 351 ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பெண்கள், 105 மூன்றாம் பாலினத்தவர் என 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் இறுதியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×