search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய கல்வி கொள்கை தொடர்பான கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் பேசிய காட்சி.
    X
    புதிய கல்வி கொள்கை தொடர்பான கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் பேசிய காட்சி.

    ‘கல்வியில் பா.ஜ.க. அரசியலை திணிக்க முயற்சி’ -தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

    புதிய கல்வி கொள்கை மூலம் கல்வியில் காவி அரசியலை பா.ஜ.க. திணிக்க முயற்சிக்கிறது என தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ‘தேசிய கல்வி கொள்கை வரைவு - 2019’ எனும் கருத்தரங்கு, சென்னை அண்ணாசாலையில் நேற்று நடந்தது.

    கருத்தரங்குக்கு அமைப்பின் நிறுவனர் தலைவர் அ.மாயவன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் திருச்சி சிவா, தொல்.திருமாவளவன், கே.சுப்பராயன், கல்வியாளர்கள் அருணன், பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படி இருக்கவேண்டும்? என்பதை தீர்மானிக்கவே புதிய கல்விக்கொள்கையை பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருக்கிறது. கல்வி வழியாக மட்டுமே நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திட முடியும். அரசியல் ரீதியாக பலம் பெற்று வரும் பா.ஜ.க., தென்னிந்திய மாநிலங்களை குறிப்பாக தமிழகத்தை குறிவைத்து காய்களை நகர்த்துகிறது.

    சனாதன இந்தியாவை கட்டமைக்கவே கல்வி எனும் தளத்தை பா.ஜ.க. கையில் எடுத்திருக்கிறது. கல்வியில் காவி அரசியலை திணிக்க முயற்சி நடக்கிறது. கொள்கை ரீதியாக புதிய கல்வி கொள்கையை எதிர்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு.

    3, 5, 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு, 9-ம் வகுப்பில் இருந்து செமஸ்டர் நடைமுறை, மும்மொழி கொள்கை என அடுத்தடுத்து கல்வித்தளத்தில் அம்புகளை புகுத்தியிருக்கிறது. கல்வியில் கருத்தியல் திணிப்பு கூடாது. தான் விரும்பும் ஒரு தலைமுறையை உருவாக்க பா.ஜ.க. திட்டமிட்டு இருக்கிறது.

    அதற்காகவே புதிய கல்வி கொள்கை. கல்வியை வைத்து ஒரே மொழி, ஒரே மதம் எனும் வரையறைக்குள் இந்தியாவை கொண்டு வர பெரும் முயற்சி நடக்கிறது. மக்கள் வெகுண்டு எழுந்தால் புதிய கல்வி கொள்கையை முறியடிக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×