search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன்
    X
    தினகரன்

    வேலூர் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது - தினகரன்

    வேலூர் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மத்திய மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது.

    கூட்டத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடி.வி.தினகரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    வேலூர், ஆரணி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் தேர்தல் குறித்து பேசிய போது பெரிய அளவில் யார் மீதும் குறை கூறவில்லை. ஆனால் நிர்வாகிகளிடம் சில முரண்பாடுகள் உள்ளது. அதை அவர்கள் மாற்றி கொள்ள வேண்டும். ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு நான் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். தலைமை கழக நிர்வாகிகள் மட்டுமின்றி மாவட்ட நிர்வாகிகள் பிற அணி செயலாளர்கள், தொண்டர்கள் என அனைவரையும் சந்தித்து பேசி வருகிறேன். அதனால் எனக்கு எந்த தகவலும் தெரியாது என நினைக்க வேண்டாம்.

    உள்ளாட்சி தேர்தலின் போது சீட்டு தருகிறேன் என்று நம் கட்சியினரை அ.தி.மு.க.வினர் இழுக்க பார்க்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்றே தெரியவில்லை. அதிலும் உள்ளாட்சி தேர்தல் வந்தால் அ.தி.மு.க. வெற்றி பெற முடியுமா இங்கிருந்து அ.தி.மு.க.விற்கு சென்றவர்கள் கட்சிக்காக போக வில்லை. சொந்த காரணத்திற்காக தான் செல்கின்றனர். அ.தி.மு.க. அமைச்சர்கள் தற்போது கட்சிக்கு ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

    சிலை கடத்தல் தொடர்பாக 2 அமைச்சர்கள் தலையீடு இருப்பதாக பொன்மாணிக்கவேல் கோர்ட்டில் கூறியுள்ளார். அவருக்கே தெரியும் கோர்ட்டில் யாரும் விளையாட்டாக பொய் சொல்ல முடியாது. கோர்ட்டில் இதுசம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. 6-ந் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம் அவர் என்ன சொல்கிறார் என்று.

    புதிய கல்வி கொள்கையில் என்னென்ன அம்சங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்று எங்களது கருத்துகளை தெரிவித்து உள்ளோம். அந்த மாற்றங்களை செய்தால் தான் வருங்கால மாணவர்களுக்கும் இன்று படிக்கின்ற மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் கர்நாடகத்தில் நடைபெற்று உள்ளது ஜனநாயக படுகொலை என்று பொதுவாக இந்தியாவில் உள்ள மக்களின் கருத்து.

    வேலூர் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது. விவசாயிகள், விவசாய நிலங்கள், காடுகள், நீர்ஆதாரங்களை அழித்துதான் ஒரு ரோடு உருவாக்கி நாடு முன்னேற வேண்டும் என்று அவசியம் இல்லை. அதனால் 8 வழிச்சாலை திட்டம் கைவிடபட்டு ஏற்கனவே இருக்கின்ற சாலைகளை அகலபடுத்த வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டுவர அரசு நினைக்கிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்த அரசாங்கம் எந்தவித முனைப்பும் காட்டுவது இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×