search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிசிஐடி போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்
    X
    சிபிசிஐடி போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்

    முன்னாள் பெண் மேயர் கொலையில் மர்மம் நீடிப்பு - நெல்லையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

    நெல்லையில் முன்னாள் பெண் மேயர் உமா மகேசுவரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று திடீர் விசாரணையில் இறங்கினர்.
    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோட்டை சேர்ந்தவர் முருகசங்கரன் (வயது 71). இவருடைய மனைவி உமா மகேசுவரி. இவர் நெல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது முதல் பெண் மேயராக பதவி வகித்தவர். இவர்களுடைய வீட்டில் அந்த பகுதியில் உள்ள அமுதா பீட் நகரை சேர்ந்த மாரி என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.

    கடந்த 23-ந்தேதி இவர்களது வீட்டில் புகுந்த மர்ம கும்பல் முருகசங்கரன், உமா மகேசுவரி மற்றும் பணிப்பெண் மாரி ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தது. மேலும் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த கொலைகள் நடந்து 4 நாட்கள் ஆகியும் கொலையாளிகள் யார்? என்பதில் மர்மம் நீடித்து வருகிறது. தி.மு.க. கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் கைமாறியதாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் நேற்று முன்தினம் போலீசார் விசாரணையை முடுக்கினர்.

    இதுதொடர்பாக மதுரையில் உள்ள தி.மு.க. பெண் பிரமுகர் ஒருவரிடம் விசாரணை நடத்திவிட்டு தனிப்படை போலீசார் நெல்லை திரும்பி உள்ளனர்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் பிறைச்சந்திரன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை திடீரென உமா மகேசுவரி வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டின் முன்பக்க கேட்டை திறந்து உள்ளே சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    சிறிது நேரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது விசாரணையை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால், திடீரென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இறங்கியது நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்தது.

    ஆனால் இந்த வழக்கை நெல்லை மாநகர போலீசாரே துப்பு துலக்கி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்று மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் பாஸ்கரன் உறுதி அளித்துள்ளார்.
    Next Story
    ×