search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் ரெயில்
    X
    குடிநீர் ரெயில்

    சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர 3-வது ரெயில் ஏற்பாடு

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர 3-வதாக ரெயிலை இயக்குவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ரெயில்வே அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
    சென்னை:

    ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு நாள்தோறும் 10 மில்லியன் லிட்டர் (ஒரு கோடி லிட்டர்)காவிரிக் கூட்டுக் குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    இதற்காக ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 ரெயில்களில் நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் 100 வேகன்களில் அனுப்பப்பட்டு வருகிறது.

    இப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குநர் நிர்மல் ராஜ், துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 23-ந்தேதி செவ்வாய்க்கிழமை முதல் 2 ரெயில்கள் மூலம் 100 வேகன்களில் 50 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. 50 வேகன்களில் குடிநீர் நிரப்புவதற்கு 3½ மணி நேரம் ஆகிறது. இந்த நேரத்தைக் குறைத்து 3 மணி நேரத்துக்குள் தண்ணீர் நிரப்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதன் அடிப்படையில், ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட மேட்டுச் சக்கரகுப்பத்தில் உள்ள 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து ரெயில் வேகன்களுக்கு குடிநீர் நிரப்பும் இடம் வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 11 வளைவுகள் உள்ளதால் நீரின் வேகம் குறைந்து வேகன்களில் நிரப்பும் நேரம் 3½ மணி நேரம் ஆகிவிடுகிறது.

    விரைவாக குடிநீர் நிரப்புவதற்காக 11 வளைவுகள் கொண்ட குழாயை 6 வளைவுகளாக குறைத்தால் குடிநீர் நிரப்பும் நேரம் குறைந்துவிடும்.

    இதற்கான வழிமுறைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சென்னைக்கு தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு சென்றால்தான் அங்குள்ள தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியும். இப்போது 2 ரெயில்களையும் ஒரு தடவை மட்டுமே இயக்க முடிகிறது.

    ஒரு ரெயில் தண்ணீர் நிரப்பி, இறக்கி சென்னை சென்று வர 16 மணி நேரம் ஆகிறது. இந்த நேரத்தை குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

    தற்போது ஒரு ரெயில் பகலிலும் மற்றொரு ரெயில் இரவிலும் இயக்கப்படுகிறது. 2 ரெயில்கள் மூலம் 55 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு வருகிறது. திட்டமிட்டபடி 1 கோடி லிட்டர் தண்ணீர் சப்ளை செய்ய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    3-வதாக ஒரு ரெயிலை இயக்கினால் மட்டும்தான் சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என்பதால் அதற்கான வேகன்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    3-வதாக ரெயிலை இயக்குவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ரெயில்வே அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

    ரெயில் போக்குவரத்தில் எவ்வித தடங்கலும், பாதிப்பும் ஏற்படாத வகையில் 3 ரெயில்களையும் எவ்வளவு நேர இடைவெளியில் இயக்குவது, 3 ரெயில்களையும் சுழற்சி முறையில் இயக்கினால் தண்ணீர் சப்ளை செய்ய முடியுமா? என்று ஆய்வு செய்யப்படுகிறது.

    தற்போது இயக்கப்படும் 2 தண்ணீர் ரெயில்களின் வினியோக நேரத்தையும் கணக்கிட்டு 3-வது தண்ணீர் ரெயிலை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். 2-வது ரெயில் இயக்குவதில் உள்ள நிலையை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள் மற்ற ரெயில் போக்குவரத்தினையும் கணக்கிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர்.
    Next Story
    ×