search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணைகள்- சுப்ரீம்கோர்ட்டில் வழக்குகளை விரைவுபடுத்த வைகோ வலியுறுத்தல்

    தமிழக அரசு பாலாறு தடுப்பணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 4.25 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் பாலாறு விளங்குகிறது.

    கர்நாடக மாநிலத்தில் தோன்றும் பாலாறு, 93 கி.மீ. தொலைவு கர்நாடகத்திலும், ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ. தொலைவும் பாய்ந்து, தமிழ்நாட்டில் 233 கி.மீ. தொலைவுக்குப் பாய்ந்து பின்னர் வங்கக் கடலில் கலக்கிறது.

    1892-ம் ஆண்டு சென்னை -மைசூர் மாகாணங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் 7-வது அட்டவணையில் குறிப்பிட்டபடி, பாலாறு பாயும் மாநிலங்களுக்கிடையே முன் அனுமதி பெறாமல் எவ்வித புதிய அணை கட்டுமானங்களோ, அணை தொடர்பான பணிகளோ மேற்கொள்ளக் கூடாது.

    ஆனால், பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு கோலார் மாவட்டத்தில் பேத்தமங்கலம், ராம்சாகர் ஆகிய இடங்களில் பெரிய தடுப்பு அணைகள் கட்டி பாலாற்று நீரைத் தடுத்தது. அதன் பின்னர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதி வழியாக வேலூர் மாவட்டத்திற்குள் நுழையும் பாலாற்று நீரை ஆந்திர அரசு மொத்தம் 22 தடுப்பு அணைகள் கட்டி தடுத்தது.

    தமிழக எல்லையில் இருந்த தடுப்பு அணைகளில் சாமாபள்ளம், பெரும்பள்ளம், ஒக்கல்ரேவ், உள்ளிட்ட அணைகளின் உயரத்தை மீண்டும் 12 அடியிலிருந்து 20 அடியாக உயர்த்திக் கட்டியது ஆந்திர அரசு.

    தமிழக எல்லையில் உள்ள நாட்றாம்பள்ளியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள நூல்குண்டா என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே 50 அடி உயரத்துக்கு மிகப்பெரிய தடுப்பு அணையை ஆந்திர அரசு கட்டி முடித்துவிட்டது. நூல்குண்டா புதிய தடுப்பு அணை குப்பம் அடுத்த கொத்தப்பள்ளியிலிருந்து சுமார் 10 கி.மீ. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

    கடந்த இரு வாராங்களாக ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ராமகிருஷ்ணாபுரம், சாந்தி புரம், போகிலிரே, கிடிமாணி பெண்டா ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பு அணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிகள் நடப்பதாகவும், போகிலிரே பகுதியில் ரூ.6 கோடி செலவில் தடுப்பு அணையை உயர்த்தி, கட்டுமானப் பணி தற்போது தொடங்கி நடந்து வருவதாகவும், பாலாறு பாதுகாப்பு சங்கத் தலைவர் ஏ.சி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள 22 தடுப்பு அணைகளையும் 40 அடி உயரம் வரை உயர்த்தத் திட்டமிட்டு இருக்கிறது. தமிழக அரசு பாலாறு தடுப்பணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளை விரைவு படுத்தாமல் இருந்தது கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொண்டு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகள் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும். மேலும் தடுப்பு அணைகள் அமைக்கும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது. இல்லையேல் பாலாற்றில் இனி சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதை உணர்ந்து செயல்பட வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
    Next Story
    ×