search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறுகலாக உள்ள சாலையில் வாகனங்கள் செல்லும் காட்சி
    X
    குறுகலாக உள்ள சாலையில் வாகனங்கள் செல்லும் காட்சி

    தஞ்சை-கும்பகோணம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்

    போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமான தஞ்சை-கும்பகோணம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    பாபநாசம்:

    தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சுமார் 40 கிலோ மீட்டர் நீளமுடையது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, வேலூர் என மாநிலத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதி நகரங்களான தஞ்சை, திருச்சி, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர், பட்டுக்கோட்டை, மதுரை, புதுக்கோட்டை, என மேற்கு மற்றும் தெற்கு பகுதி நகரங்களையும் இணைக்கும் மிக முக்கியமான சாலையாக இந்த சாலை உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தின் மிக முக்கியமான நகரமாக விளங்கும் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர், பாபநாசம் தாலுக்கா அரசு அலுவலகங்ளில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அலுவல் நிமித்தமாக தினந்தோறும் தஞ்சைக்கு வருவதற்கும் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள், கல்லூரி, பள்ளி செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். குறுகலாக உள்ள இந்த சாலையில் இருபுறமும் சீறி பாய்ந்து வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தனியார் பஸ்கள் வலதுபுறம் அத்துமீறி செல்வதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

    முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்னும் விரிவாக்க பணிகள் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். கும்பகோணம் தாலுக்கா போலீஸ் நிலையத்திலிருந்து தாராசுரம் காய்கறி மார்க்கெட்டு வரை மிகவும் குறுகலான சாலை, அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படும் பாபநாசம் இசட் வடிவ வளைவுகள் மற்றும் அய்யம்பேட்டை மதகடி பஜார் பகுதிகள், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் மானாங்கோரை திருப்பங்கள் என இந்த சாலையில் ஏகப்பட்ட நெருக்கடி உள்ளன. சிறிய அளவு வாகன உரசல் ஏற்பட்டாலே வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நிற்பதை தினந்தோறும் பார்க்க முடிகிறது.

    தஞ்சாவூர்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலையோர இரண்டு பகுதிகளிலும் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான மரங்கள் ரோட்டின் குறுக்கும், நெறுக்குமாக உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பழமையான மரங்களையும் நெடுஞ்சாலைதுறையினர் வெட்டி அப்புறப்படுத்தினால் சாலை விரிவாக்க பணிக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    கும்பகோணம் தஞ்சை சாலை விரிவாக்கம் தொடர்பான தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமும் நடத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக தஞ்சை-கும்பகோணம் சாலை விரிவாக்கம் தொடர்பாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கபட வேண்டும் அல்லது புதிய புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை உடனே தொடங்கவேண்டும் என்பது இந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
    Next Story
    ×