search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரயான்2
    X
    சந்திரயான்2

    சந்திரயான் விஞ்ஞானிகளுக்கு விருது - புதுவை சட்டமன்றம் பரிந்துரை

    சந்திரயான் விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவிக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறோம் என்று புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் பேசியதாவது:-

    அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட ஒன்றிரண்டு நாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவும் நிலவை ஆய்வு செய்யும் முயற்சியில் மீண்டும் சாதனை படைத்துள்ளது.

    நிலவின் தென் துருவப் பகுதியில் மனிதன் வாழ்வதற் கான சாத்தியக்கூறுகள், தண்ணீர் உள்ளிட்ட கனிம வளங்கள் உள்ளனவா? என ஆய்வு நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.

    இது உண்மையில் இந்தியாவிற்கு பெருமை தரும் நிகழ்வாகும். சந்திரயான்-2 திட்டமிட்டபடி 48 நாளில் தனது ஆய்வு பணியை மேற்கொள்ள என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்த இஸ்ரோ நிறுவனம், இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பிலும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதுவை சட்டப்பேரவையும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து பா.ஜனதா உறுப்பினர் சாமிநாதன் பேசும்போது, முழுமையாக இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டு சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளுக்கு மட்டும் பெருமையல்ல, அனைத்து இந்தியர்களின் பெருமை. இது பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசுக்கும், விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:

    அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. புவிவட்டத்தில் இருந்து சென்று நிலவின் தென்பகுதிக்கு சென்று ஆய்வு செய்யவுள்ளது. இதில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    இதற்கு முன்னால் விண்கலத்தை ஏவும் கிரியோஜெனிக் இன்ஜின் ரஷியாவிடம் இருந்து பெறப்பட்டது. இதற்கு தடை விதித்துவிட்டனர். இதனால் சொந்த முயற்சியில் நமது விஞ்ஞானிகள் இன்ஜினை செய்துள்ளனர்.

    ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. விண்கலம் ஏவப்பட்டது. இதில் ஹீலியம் திரவத்தை எரிபொருளாக பயன்படுத்துகின்றனர். செப்டம்பர் 6 அல்லது 7-ந்தேதி விண்கலம் நிலவின் தென்பகுதிக்கு சென்றுவிடும். அதிலிருந்து ரோவர் நிலவில் இறங்கி புகைப்படத்தை எடுத்து பூமிக்கு அனுப்பவுள்ளது. இதன்மூலம் நிலவின் தென்பகுதியை பற்றி அறிந்துகொள்ள முடியும்.

    விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள்தான் முதன்மை பெற்றிருந்தது. இதில் ஐரோப்பிய நாட்டை பின்னுக்குத்தள்ளி நாம் 3-ம் இடத்தை பிடித்துள்ளோம். இந்த சாதனை செய்த விஞ்ஞானிகளை பாராட்ட வேண்டும்.

    தமிழ் மண்ணை சேர்ந்த விஞ்ஞானியின் தலைமையில் சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்டது. நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதாகும். எனவே விஞ்ஞானிகளுக்கு புதுவை சட்டமன்றம் சார்பிலும், புதுவை மக்கள் சார்பிலும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவிக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×