search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி விபத்து
    X
    லாரி விபத்து

    திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தில் லாரிகள் மோதல் - டிரைவர்கள் உயிர் தப்பினர்

    சேலம் திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தில் இன்று காலை விபத்தில் டிரைவர்கள் குப்புசாமி, ஆறுமுகம் ஆகிய இருவரும் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 28). லாரி டிரைவர்.

    இவர் இன்று அதிகாலை மேச்சேரியில் உள்ள செங்கல் சூளையில் இருந்து லாரியில் செங்கல் ஏற்றிக் கொண்டு நாமக்கல்லுக்கு சென்றார்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த டிரைவர் ஆறுமுகம் (35) என்பவர் பர்கூரில் இருந்து லாரியில் கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு சேலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

    இந்த 2 லாரிகளும் இன்று காலையில் சேலம் திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தில் சென்றது. அப்போது டிரைவர் ஆறுமுகம் லாரியை வேகமாக ஓட்டிச் சென்று செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரியை முந்தினார். அப்போது அவர் திடீரென பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார்.

    இதனால் பின்னால் வந்த செங்கல் லோடு லாரி எதிர்பாராதவிதமாக அந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து லாரி முன்பக்கம் நொருங்கியது. இந்த சம்பவத்தில் டிரைவர்கள் குப்புசாமி, ஆறுமுகம் ஆகிய இருவரும் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    கிராணைட் கற்கள் ரோட்டில் சரிந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    இது பற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

    பின்னர் விபத்துக்குள்ளான 2 லாரிகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மாற்று லாரியில் கிரானைட் கற்களை ஏற்றி, போக்குவரத்தை சரி செய்து, மீண்டும் மேம்பாலம் வழியாக வாகனங்களை திருப்பி விட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×