search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராப்ராய் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பாறை மீது படுத்து ஓய்வெடுக்கும் சிறுத்தைப்புலியை படத்தில் காணலாம்
    X
    ராப்ராய் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பாறை மீது படுத்து ஓய்வெடுக்கும் சிறுத்தைப்புலியை படத்தில் காணலாம்

    கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் உலா வரும் சிறுத்தைப்புலிகள்

    கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் உலா வரும் சிறுத்தைப்புலிகளால், தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    கோத்தகிரி:

    மலை மாவட்டமான நீலகிரி வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள கோத்தகிரி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருவது வழக்கமாக உள்ளது.

    இதனால் அடிக்கடி அங்கு மனித-வனவிலங்குமோதல்கள் அதிகரித்து வருகின்றன. கோத்தகிரி வனப்பகுதி பரந்து விரிந்து இருக்கிறது. இங்கு வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போதுமான ஊழியர்கள் இல்லாததால் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.

    கடந்த 18-ந் தேதி இங்குள்ள கண்டிப்பட்டி என்ற பகுதியில் காட்டு யானை தாக்கி பாலன் என்பவர் இறந்தார். 19-ந் தேதி கடினமாலா கிராமத்தில் காட்டெருமை தாக்கி மூதாட்டி படுகாயம் அடைந்தார். இதுபோன்ற சம்பவங்கள் இங்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

    கோத்தகிரி அருகே உள்ள ராப்ராய் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்தப்பகுதியில் உள்ள பேட்லாடா, தப்பகம்பை, கொணவக்கரை, ராப்ராய் ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் தேயிலை தோட்டங்களின் அருகில் உள்ள சாலை வழியாகதான் தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் ராப்ராய் பகுதியில் இருந்து பேட்லாடா கிராமத்துக்கு செல்லும் சாலையில் உள்ள தேயிலை தோட்டத்தில் 2 சிறுத்தைப்புலிகள் அவ்வப்போது உலா வருகின்றன. அத்துடன் அங்கு இருக்கும் பாறையில் அவை படுத்து ஓய்வும் எடுத்து வருகிறது. இதனால் அங்கு தேயிலை பறித்து வரும் தொழிலாளர்கள் பீதியடைந்து உள்ளதுடன், வேலைக்கு செல்வதையும் தவிர்த்து வருகிறார்கள். அத்துடன் அந்த வழியாக நடந்து செல்வதையும் பொதுமக்கள் தவிர்த்து உள்ளனர்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடிகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பட்டப்பகலிலேயே மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் பாறையில் சிறுத்தைப்புலிகள் படுத்து இருப்பதை பார்க்கும்போது பயமாக இருக்கிறது.

    எனவே இங்கு உலா வரும் சிறுத்தைப்புலிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தவோ அல்லது கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விடவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் குடியிருப்பு பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து பொதுமக்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×