search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    நாமக்கல் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரிப்பு

    நாமக்கல் உழவர்சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளதால், அதன் விலை குறைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல், எருமப்பட்டி, மோகனூர், புதுச்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நாமக்கல் உழவர்சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் ஆங்காங்கே பெய்து வரும் சாரல்மழை காரணமாக தற்போது காய்கறிகளின் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. விடுமுறை நாளான நேற்று நாமக்கல் உழவர்சந்தைக்கு 26 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இது குறித்து உழவர்சந்தை அதிகாரிகள் கூறியதாவது:-

    சாரல்மழை காரணமாக நாமக்கல் உழவர்சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை சற்று குறைந்து உள்ளது. இன்று (நேற்று) 26 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த காய்கறிகள் ரூ.7 லட்சத்து 75 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 6 ஆயிரத்து 5 பேர் வாங்கி சென்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கடந்த வாரம் நாமக்கல் வாரச்சந்தைக்கு 24 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று கத்தரி கிலோ ரூ.36-க்கும், வெண்டை கிலோ ரூ.28-க்கும், புடலைக்காய் கிலோ ரூ.28-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.32-க்கும், கேரட் கிலோ ரூ.72-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.40-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.48-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.26-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    கடந்த வாரம் இஞ்சி கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோவுக்கு ரூ.20 குறைந்து கிலோ ரூ.140-க்கு விற்பனையானது.
    Next Story
    ×