search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ஆறுமுகசாமி கமி‌ஷனில் ஓ.பி.எஸ். ஆஜராகாதது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

    விசாரணை கமி‌ஷன் முன்பு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக வேண்டும் என 6 முறை சம்மன் அனுப்பியும் ஒரு முறை கூட ஆஜராகாதது ஏன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
    தேனி:

    தேனி அருகே வீரபாண்டியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் தி.மு.க.வில் இணைந்தனர். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தங்கதமிழ்செல்வன் வரவேண்டிய இடத்துக்கு வந்துள்ளார். தாய் கழகத்தில் மீண்டும் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வாக இருந்தால் இன்றைக்கு தங்கதமிழ்செல்வன் தி.மு.க.வுக்கு வரமாட்டார். ஆனால் எம்.ஜி.ஆருக்கும் இன்றைய அ.தி.மு.க.வுக்கும் தொடர்பு இல்லை.

    ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக முதலில் கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு பதவி இல்லாதபோது அதனை கூறினார். அவரை சமாதானம் செய்வதற்காக விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த விசாரணை கமி‌ஷன் நீடித்துக் கொண்டே செல்கிறது.

    விசாரணை கமி‌ஷன் முன்பு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக வேண்டும் என 6 முறை சம்மன் அனுப்பியும் ஒரு முறை கூட ஆஜராகவில்லை. ஜெயலலிதாவை பற்றி கவலைபடாதவர்கள்தான் தற்போது அ.தி.மு.க.வில் உள்ளனர். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மறந்துவிட்டு மோடி, அமித்ஷா படங்களை வைத்து பூஜை செய்கின்றனர்.

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 13 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். ஆனால் நாங்கள் மிட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற நீங்கள் அல்வா கொடுத்தா மக்களை ஏமாற்றினீர்கள்? முறையாக தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளில் 200 தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறும்.

    தி.மு.க.வில் 38 எம்.பி.க்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்? என கேட்டனர். ஒரு மாதத்தில் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்பதை எதிர்த்து திரும்ப பெற வைத்துள்ளனர்.

    ரெயில்வே துறையில் இந்தியில் பேச வேண்டும் என்பதை ஒரு மணி நேரத்தில் திரும்ப பெற வைத்தனர். தபால் துறை தேர்வில் இந்தியில் எழுத வேண்டும் என்பதை எதிர்த்து குரல் கொடுத்து அந்த தேர்வை ரத்து செய்ய வைத்துள்ளனர். நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

    அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க கனவு காண்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் அது விரைவில் நனவாக நடக்கத்தான் போகிறது. அதற்காக அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×