search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    பயிர் காப்பீடு திட்டத்தை முறைப்படுத்தவேண்டும்- கேஎஸ் அழகிரி

    பயிர் காப்பீடு திட்டத்தை முறைப்படுத்தவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
    சென்னை :

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 18-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதையடுத்து கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சிவாஜி கணேசனின் பாசமலர் திரைப்படம் நெஞ்சில் மறவாமல் இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இவ்வாறு ஒரு மனிதன் நடிக்க முடியுமா? என்று ஆச்சரியப்படும் வகையில் நடித்தவர் சிவாஜி கணேசன். மெரினா கடற்கரையில் இருந்த சிவாஜிகணேசன் சிலையை அகற்றியதில் தனி மனிதன் என்ற முறையில் தனக்கு ஒரு மனக்குறை இருக்கிறது.

    சிவாஜிகணேசன் சிலையை கருணாநிதி நிறுவியதால் எடுத்தார்களா? அல்லது சிவாஜிகணேசனுக்கு சிலை இருக்கக்கூடாது என்பதற்காக எடுத்தார்களா? என்று என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகத்தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தால் மட்டுமே நமக்கான நிதிகளை மத்திய அரசிடம் இருந்து பெற முடியும். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வட இந்தியாவுக்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று கூறுகிறார். தமிழை பண்டமாற்று செய்ய முடியாது. வட மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக வைத்தால் அங்கு தமிழ் மாணவர்கள் இருந்தால் மட்டுமே படிக்க முடியும். மற்றபடி யாரும் தமிழ் மொழியினை படிக்க முடியாது.

    எனவே வட இந்தியாவுக்கு தமிழை எடுத்து செல்லமுடியும் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. மோடி அரசு பதவி ஏற்ற பின்னர் பயிர் காப்பீடு திட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை. பொதுத்துறை மூலமாக செயல்படுத்தப்படவேண்டிய பயிர் காப்பீடு திட்டம் தனியார் மூலமாக செயல்படுத்தப்படுவதால் மிகப்பெரிய அளவில் கொள்ளை நடைபெறுகிறது. எனவே அரசு அதிகாரிகள் கவனம் செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தை முறைப்படுத்தவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×