search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    கருங்கலில் நகை கொள்ளை - என்ஜினீயர் வீட்டில் 2 கைரேகைகள் சிக்கியது

    கருங்கலில் என்ஜினீயர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வீட்டில் பதிவாகியிருந்த 2 கைரேகைகள் சிக்கியது.
    நாகர்கோவில்:

    கருங்கல் அருகே குறும்பனை இனிகோ நகரை சேர்ந்தவர் சேசர்பெனான்ஸ் (வயது 41). இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஊருக்கு வந்து உள்ளார்.

    இவர் மனைவி, குழந்தைகளுடன் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றுவிட்டு நேற்று வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 67½ பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

    இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் 2 கைரேகைகள் சிக்கியது.

    மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கொள்ளை சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். சேசர் பெனான்ஸ் வெளியூர் செல்வதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து கொள்ளை நடந்த வீட்டில் சிக்கிய கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் சமீப காலமாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று பட்டபகலில் நடந்து சென்ற அல்போன்ஸ் (60) என்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்று உள்ளனர்.

    இதேப்போல் ராஜாக்கமங்கலத்தில் வீட்டை உடைத்து 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் தொடர்ந்து பீதியில் உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×