search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    72 ஆயிரம் போலீசாருக்கு 5 லிட்டர் பெட்ரோல் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    மோட்டார் சைக்கிளில் ரோந்து செல்லும் 72 ஆயிரம் போலீசாருக்கு மாதந்தோறும் 5 லிட்டர் பெட்ரோலுக்கான தொகை படியாக வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தொடர்ந்து, தனது துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது:-

    காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் களப்பணியில்(ரோந்து) ஈடுபட்டுள்ள 72 ஆயிரம் போலீசாருக்கு மாதம் ஒன்றுக்கு 5 லிட்டர் பெட்ரோலுக்கு உண்டான வாகன எரிபொருள் செலவுக்கான தொகை, எரிபொருள் படியாக வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.30 கோடி தொடர் செலவினம் ஏற்படும்.

    காவல் துறை தலைமையகத்தின் அனைத்து ஆவணங்களும், ரூ.5.10 கோடி செலவில் எண்ம இலக்க முறையில் காப்பகப்படுத்தப்படும். காவல் துறையில் வாகன மேலாண்மை மற்றும் சொத்து மேலாண்மை ஆகியவற்றில் தானியக்கம் ரூ.25 லட்சம் செலவில் அமல்படுத்தப்படும். அனைத்து காவல் ஆணையரகங்களுக்கும் மின் ரோந்து காவல் முறை ரூ.1.26 கோடி செலவில் அமல்படுத்தப்படும்.

    தமிழகத்தில் 14 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களும் மற்றும் சென்னை மெரினா கடற் கரையில் மீட்புப்பணிகள் நிலையமும், ரூ.17.25 கோடி செலவில் அமைக்கப்படும்.

    சென்னை மாவட்டம் வேப்பேரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டிடம் மற்றும் 2 அலுவலர் குடியிருப்புகள், காஞ்சீபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தில் 6 அலுவலர் குடியிருப்புகள் மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரியில் 13 குடியிருப்புகளும், ரூ.6.01 கோடி செலவில் கட்டப்படும்.

    தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகளை வானில் இருந்து கண்காணிக்க 50 ஆளில்லா விமானங்கள் ரூ.1 கோடி செலவில் வாங்கப்படும். 1,500 தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்காப்பு சாதனங்களுடன் கூடிய உடைகள் ரூ.8.54 கோடி செலவில் வழங்கப்படும்.

    சொந்த இல்லம் திட்டம் 10 மாவட்டங்களுக்கு விரிவு

    காவலர்களுக்கு சொந்த இல்லம் திட்டத்தை மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவு படுத்த அரசு திட்டமிட்டு இருக்கிறது.

    காவல் பணியாளர்களின் ஆரோக்கியத்தை பேணிகாக்க வருடம் ஒருமுறை முழு உடல் பரிசேதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை எய்தும் காவலர்களுக்கு வழங்கப்பட்டுவந்த தொகை ரூ.1 லட்சத்திருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. காவலர்கள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் நிறுவனத்தினருடன் இணைந்து உளவியல்ரீதியான பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ரூ.10 கோடி வழங்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் கூடுதல் இயக்குனர் தலைமையில் பிரத்யேகமாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×