search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபா ஆதித்தனார்
    X
    சிபா ஆதித்தனார்

    சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது - தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு

    சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது அறிவித்து உள்ள தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மொழியில் தமிழர் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை போற்றியும், பிறமொழி கலப்பின்றி வெளிவரும் தினசரி பத்திரிகை, வாரப்பத்திரிகை மற்றும் மாத இதழ்களில் ஒன்றினை முறையாக தேர்ந்து எடுத்து ஆண்டு தோறும் சி.பா.ஆதித்தனார் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் தமிழ் வளர்ச்சித்துறை கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவித்து இருப்பது பாராட்டி வரவேற்க கூடியதாகும்” என்று தெரிவித்து உள்ளார்.

    புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் சார்பில் ‘தினத்தந்தி’ நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது வழங்கப்படும் என்னும் அறிவிப்பினை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவித்தார். இவ்விருதுடன் ரூ.1 லட்சம் பரிசு தொகை, பாராட்டிதழ், கேடயம் மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பு உலக தமிழர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்க கூடியதாகும். சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவித்ததன் வாயிலாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கும், அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் க.பாண்டியராஜனுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

    வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் அமைச்சரும், ‘தினத்தந்தி’ நிறுவனருமான சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது அறிவித்து இருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது தமிழுக்கும், திருக்குறளுக்கும் ஒப்புகழ் உயர்வு ஆற்றிய அய்யாவின் பணிக்கு கிடைத்த வெற்றி. தமிழுக்கு ஆற்றிய தொண்டுக்கும், சமுதாய பணிக்கும், எண்ணற்ற ஏழைகள் வாழ்வில் உயர்வதற்கும், சமூகம், இலக்கியம், ஆன்மிகம் போன்ற சிறப்பான தொண்டிற்கு தமிழக அரசு சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது வழங்குவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கம் சார்பில் லண்டனில் இருந்து பாராட்டி மகிழ்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின் முறை மகமை தர்மபண்டு தலைவர் சந்திரமோகன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொருளாளர் பொன்ராஜ், துணை செயலாளர் செல்வகாமராஜ், துணை தலைவர் வன்னியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் தங்கவேலு வரவேற்றார். காளியப்பன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில், தமிழக சட்டசபையில் தமிழ் மொழியில் நாகரிகம் பண்பாடு பற்றி வெளியிடும் நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில் பிற மொழி கலப்பு இன்றி வெளியிடும் இதழ்களை தேர்வு செய்து ஏழை எளியோரும் நல்ல தமிழ் படிக்கவும், பேசவும் நாளிதழ் மூலம் தமிழ் வளர்த்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை நாடார் நலச் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி ஆகியோரும் தமிழக அரசை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    Next Story
    ×