search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு
    X
    சென்னை ஐகோர்ட்டு

    நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக எத்தனை புகார்கள் வந்தன? அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக எத்தனை புகார்கள் வந்தன? என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம் பிடாரிதாங்கல் பகுதியில் நிலத்தடி நீர் திருடப்படுவதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் சிவக்குமார் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாவட்ட வருவாய் அலுவலர், பூந்தமல்லி தாசில்தார் ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கலெக்டர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், ‘பிடாரிதாங்கல் கிராமத்தில் உள்ள 17 சட்ட விரோத ஆழ்துளை கிணறுகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உதவியுடன் சோதனை நடத்தி 130 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன. 34 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கக்கூடாது. அதிகாரிகளின் ஆதரவு இல்லாமல் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்துச்செல்ல முடியாது.

    இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலைமை மாநிலத்தில் எந்த பகுதியிலும் நடக்காத வகையில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இருக்கிறது என்பதற்காக சட்ட விதிகளை மீற முடியாது. சென்னை பெருநகர பகுதி நிலத்தடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகாரியான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய செயலாளர் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் 2 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    தமிழகம் முழுவதும், நிலத்தடி நீர் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நிலத்தடி நீரை எடுப்பதற்கு எத்தனை பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன? சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவது தொடர்பாக எத்தனை புகார்கள் வந்துள்ளன? அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து 2 வாரங்களுக்குள் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    வழக்கு விசாரணை ஆகஸ்டு 2-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×