search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் தங்கமணி
    X
    அமைச்சர் தங்கமணி

    உயர்மின் கோபுரம் அமைக்கும் விவகாரம்: மு.க.ஸ்டாலின்-அமைச்சர்கள் விவாதம்

    சட்டசபையில் இன்று உயர்மின் கோபுரம் அமைப்பது தொடர்பான பிரச்சினைக்கு மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று மின்துறை அமைச்சர் தங்கமணி உயர்மின் கோபுரம் அமைப்பது தொடர்பான பிரச்சினை தொடர்பாக கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் மக்கள் நலன்களுக்கு தான் மின்சாரத்தை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. வெளி மாநிலத்தில் இருந்து மின்சாரம் கொண்டு வருவதற்கு உயர்மின் கோபுரங்கள் பயன்படுகின்றன.

    ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாதபடி சில எம்.பி.க்கள் விவசாயிகளை தூண்டுகிறார்கள். இதை சுமூகமாக தீர்க்க எதிர்கட்சித் தலைவரும் உதவ வேண்டும்.

    மு.க.ஸ்டாலின்:- இதுபற்றி எங்களிடம் பேசுவதை விட பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து சுமூகமாக பேசி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.

    அமைச்சர் தங்கமணி:- நாங்கள் பேச்சு நடத்தினாலும் சில எம்.பி.க்கள் தடையாக இருக்கிறார்கள். (அப்போது தி.மு.க. உறுப்பினர் செந்தில் பாலாஜி எழுந்து ஒரு கருத்தை தெரிவித்தார். இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராக தி.மு.க. உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது).

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- அமைச்சர் சொன்ன விளக்கத்துக்கு எதிர்கட்சி தலைவர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு உறுப்பினர் அவையின் அமைதியை குலைக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொள்வது அவை நடவடிக்கையை மீறும் செயல்.

    சபாநாயகர் தனபால்:- அமைச்சரும், எதிர்கட்சி தலைவரும் அமைதியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது உறுப்பினர் திடீரென்று குறுக்கிட்டு பேசுவது சரி அல்ல.

    மு.க.ஸ்டாலின்:- மின்துறை அமைச்சர், எம்.பி.க்கள் தூண்டி விடுவதாக சொல்வதை மறுப்பதற்காகத் தான் எங்கள் உறுப்பினர் எழுந்தார்.

    ஓ.பன்னீர்செல்வம்:- அமைதியாக சபை நடந்து கொண்டிருக்கும்போது உங்கள் உறுப்பினர் இவ்வாறு நடந்து கொண்டது தவறு. ஒரு வாய்ப்பு கேட்டு பின்னர் பேசி இருக்கலாம். செந்தில் பாலாஜி நடந்து கொண்ட முறை அவை மரபுக்கு ஏற்புடையது அல்ல.

    மு.க.ஸ்டாலின்:- அமைச்சர் சொன்னதை ஏற்கிறேன். உறுப்பினர் நடந்து கொண்டது வருத்தப்படக் கூடியது என்றாலும் எம்.பி.க்கள் குறித்து அமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தமிழகத்தின் நலன் கருதிதான் மின் கோபுரம் அமைத்து வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வருவதற்காக மின் கோபுரம் அமைக்கப்படுகிறது. சுமூகமாக விவசாயிகளுடன் பேச்சு நடக்கும் போது பீதியை கிளப்பும் வகையில் சிலர் நடந்து கொள்வதைத்தான் அமைச்சர் சுட்டிக் காட்டினார். இதில் சுமூக தீர்வு உள்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    அமைச்சர் தங்கமணி:- எங்கள் தொகுதியில் எம்.பி. ஒருவர் பேசியதை விவசாயி ஒருவரே என்னிடம் தெரிவித்தார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து மின்சாரம் கொண்டு வர ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. எனவே மின் கோபுரம் அமைக்கவிடாமல் தடுத்தால் நமக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எம்.பி.க்கள் பற்றி நான் குறிப்பிட்டதாக சொல்வதை தேவைப்பட்டால் நீக்கலாம். என்றாலும் தமிழக மக்கள் நலன் கருதி மின் கோபுரங்கள் அமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×