search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    பொன்.மாணிக்கவேலுக்கு அரசு தேவையான உதவிகளை செய்தது - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

    சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசால் வழங்கப்பட்டதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று போலீஸ் மானிய கோரிக்கை மீதான விளக்கம் நடைபெற்றது. அப்போது ஐ.பெரியசாமி (தி.மு.க.) பேசும் போது அ.தி.மு.க. ஆட்சி மீது சரமாரியாக குற்றம் சாட்டினார்.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேலுவுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

    இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து பேசியதாவது:-

    பொன். மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கடந்த 2012 முதல் 2015 வரை காவல் துறை துணைத் தலைவராகவும், 2015 முதல் 30.11.2018 வரை இத்துறையின் தலைவராகவும் பணியாற்றினார். 1.12.2018 முதல் இதே பிரிவின் சிறப்பு அதிகாரியாக உயர் நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்டு, நாளது வரை இத்துறையின் சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    மேற்கண்ட காலகட்டத்தில் 31 சிலை கடத்தல் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 13 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். மீதமுள்ள வழக்குகள் விசாரணையில் உள்ளன. இது தவிர, பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 333 சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, காவல்துறை இயக்குநரால் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

    இவருடைய பணிக்காலத்தில் 7 வழக்குகளில் மட்டுமே நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளார். 6 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை பெற்றுள்ளனர். 1983 முதல் 10.2.2012 வரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் 259 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சராசரியாக, அந்த 28 வருட காலகட்டத்தில், 9 வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் பதியப்பட்டுள்ளன. இவருடைய பணிக்காலத்தில் சராசரியாக வெறும் 4 வழக்குகள் தான் பதியப்பட்டுள்ளது.

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொன்.மாணிக்கவேல் சிலை திருட்டு மற்றும் கடத்தல் தடுப்புப் பிரிவின் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அப்பிரிவிற்கு அவர் கோரியபடி 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 7 துணை கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள், 45 உதவி ஆய்வாளர்கள், 13 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 125 இதர காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, அவர்கள் அப்பிரிவில் அறிக்கை செய்து அயற் பணியாக பணியாற்றி வந்தனர்.

    உச்ச நீதிமன்ற உத்தரவின் படி சிறப்பு அதிகாரிக்கு நிதி மற்றும் வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக அரசாணைகளை அரசு வெளியிட்டுள்ளது.

    சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கையானது 1 காவல் துணை கண்காணிப்பாளர், 5 காவல் ஆய்வாளர்கள், 3 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20 இதர காவல் ஆளினர்கள் ஆகும்.

    உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க 204 காவல் அதி காரிகள் மற்றும் ஆளினர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கையை விட 600 சதவீதத்திற்கும் அதிகமாக, குறிப்பாக உதவி ஆய்வாளர் முதல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் வரை இதற்கும் அதிகமான சதவீதத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கான செலவானது, கடந்த 1.4.2017 முதல் 21.7.2017 வரை 24 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த செலவானது 21.7.2017 முதல் 30.11.2018 வரை 22 கோடியே 76 லட்சத்து 43 ஆயிரத்து 35 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பிற காவல் பிரிவில் இருந்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவிற்கு அயல் பணியாக வந்த காவலர்களின் சம்பளம் மற்றும் வாகன எரிபொருள் செலவும் அடங்கும்.

    சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் சிறப்பு குழுவிற்கு 31 நான்கு சக்கர வாகனங்களும், 29 இரு சக்கர வாகனங்களும், 15 வாக்கி டாக்கி கருவிகளும், 2 ஏழகு கருவிகளும், 15 கணினிகள், 12 யு.பி.எஸ்., 12 பிரிண்டர் (கலர் பிரிண்டர் உட்பட), 5 வீடியோ கேமிரா, 10 ஸ்டில் கேமிரா மற்றும் தேவையான மரச்சாமான்களும் சிலை திருட்டு கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி காவல் துறை தலைவர், சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் பொறுப்பு அதிகாரியாக இருந்தபோதே வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி மற்றும் அவர்களின் தனிக் குழுக்கள் தங்குவதற்கு கமேண்டோ பள்ளி, திருச்சிராப்பள்ளி மற்றும் காவல் துறை துணை தலைவர், தஞ்சாவூர் அவர்களின் பழைய முகாம் அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. கும்பகோணம் நவீன கட்டுப்பாட்டு அறையில் 2 அறைகளும் மற்றும் ஒரு பெரிய ஹாலும் மற்றும் கிண்டியிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவில் சிறப்பு அதிகாரிக்கு அலுவலகமும் வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சிராப்பள்ளியில் உள்ள சிறப்பு முகாமிற்கு ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு கணினி உதவியாளரும் அவருக்கு அன்றாடப் பணிகளில் உதவி புரிந்திட வழங்கப்பட்டுள்ளது. எனவே, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தேவைக்கேற்ப அவ்வப்போது அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    பொன்.மாணிக்கவேலே தனது 19.3.2018 தேதியிட்ட கடிதத்தில் தன் பிரிவுக்கு தேவை எதுவும் இல்லை என எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம் 12.4.2019 தேதியிட்ட தனது உத்தரவில், தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டு மனு பகுதி அளவு ஏற்கப்பட்டு உள்ளதாகவும், அதன்படி சிலை கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர் அபய் குமார் சிங், அப்பிரிவின் தலைமைப் பொறுப்பில் தொடர்வார் என்றும், வழக்குகளின் விசாரணை குறித்து அவ்வப்போது காவல் துறை கூடுதல் இயக்குநரிடம், சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், பொன்.மாணிக்கவேல் தன்னிச்சையாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர் என இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

    ஐ.பெரியசாமி:- தமிழ்நாட்டில் ‘கியூ’ பிரிவு போலீஸ் செயல்பாடு திருப்தியாக இல்லை. ஒரு சிலரை காப்பாற்ற அரசு செயல்படுகிறது. ஒரு சில அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். கபாலீசுவரர் கோவில் அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே ஒரு சிலரை காப்பாற்ற அரசு செயல்படுகிறதே தவிர தமிழக மக்களை காப்பாற்ற முயற்சி எடுக்கவில்லை.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி, சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது. யார் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கிற அரசு இந்த அரசு ஆகும். உறுப்பினர் தவறான குற்றச்சாட்டை கூறக்கூடாது. ‘கியூ’ பிரிவு போலீசார் நிறைய கண்டு பிடித்துள்ளனர். எல்லா ஆட்சியிலும் தவறு நடக்கிறது. அதை கண்டுபிடித்து நிவர்த்தி செய்வது தான் அரசின் கடமை. அந்த அடிப்படையில் தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
    Next Story
    ×