search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூறாவளி காற்றில் சாய்ந்து கிடக்கும் வாழைகள்.
    X
    சூறாவளி காற்றில் சாய்ந்து கிடக்கும் வாழைகள்.

    குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை - 20 ஆயிரம் வாழைகள் நாசம்

    குமரி மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசமாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    இரணியல், ஆணைக் கிடங்கு, குளச்சல், கோழிப்போர்விளை, முள்ளங்கினாவிளை, நாகர்கோவில், மயிலாடி, கொட்டாரம் பகுதிகளில் நேற்றிரவு பரவலாக பலத்த மழை பெய்தது. முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 38 மி.மீ. மழை பதிவானது.

    களியக்காவிளை, தக்கலை, இரணியல் பகுதிகளில் இன்று காலையிலும் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் கொட்டி வருகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 4.80 அடியாக இருந்தது. அணைக்கு 470 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 460 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39 அடியாக இருந்தது. அணைக்கு 260 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 320 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சாமித்தோப்பு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அந்த பகுதியில் நின்ற மரம் ஒன்று முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. மின்கம்பங்களும் சேதமடைந் தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின. மின்வாரிய அதிகாரிகள் இன்று காலை உடைந்து விழுந்த மின்கம்பங்களை சரி செய்தனர்.

    கொல்லங்கோடு அருகே கிராத்தூர் வெங்குளம்கரை பகுதியில் மேற்கு கடற்கரை சாலையின் நடுவே அயனி மரம் ஒன்று பலத்த காற்று வீசியதில் முறிந்து விழுந்தது. இரவு நேரத்தில் மரம் முறிந்து விழுந்ததில் மீட்பு பணி நடைபெறவில்லை. இதன் காரணமாக இரவு வேளைகளில் அந்த வழியாக வந்த வாகனங்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் பரிதவித்தன.

    சுசீந்திரம், தக்கலை மற்றும் நாகர்கோவிலிலும் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றிற்கும் மரங்கள் முறிந்தது.

    பொற்றையடி, பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு, சுங்கான்கடை, பார்வதிபுரம் பகுதியில் நேற்றிரவு வீசிய சூறைக் காற்றிற்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசமாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-15.2, பெருஞ்சாணி-11.8, சிற்றாறு-1-18, சிற்றாறு-2-17, மாம்பழத்துறையாறு-24, இரணியல்-12.4, ஆணைக் கிடங்கு-25, குளச்சல்-26, குருந்தன்கோடு-14.4, அடையாமடை-27, கோழிப் போர்விளை-38, முள்ளாங் கினாவிளை-30, புத்தன் அணை-9.4, திற்பரப்பு-26.4, நாகர்கோவில்-19.3, பூதப் பாண்டி-8.6, சுருளோடு-16.2, கன்னிமார்-10.2, பாலமோர்- 31.4, மயிலாடி-7.2. கொட்டா ரம்-8.4.

    Next Story
    ×