search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கொலை (கோப்பு படம்)
    X
    கொலை (கோப்பு படம்)

    சுசீந்திரம் அருகே இரட்டை கொலை - சரண் அடைந்த 2 பேரிடம் போலீஸ் காவலில் விசாரணை

    சுசீந்திரம் அருகே மினி பஸ்சில் ஏற்பட்ட தகராறில் 2 பேரை கொன்றதாக சரண் அடைந்த 2 பேர் போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    என்.ஜி.ஓ. காலனி:

    நாகர்கோவில் அருகே வண்டிக்குடியிருப்பைச் சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 17), இவரது நண்பர் அஜித் குமார் (21). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சி.டி.எம்.புரம் பகுதியில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.

    இந்த கொலை வழக்கு குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மினி பஸ்சில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் என்.ஜி.ஓ. காலனி காமராஜ் சாலையைச் சேர்ந்த ரமேஷ், மினி பஸ் டிரைவர் சுந்தர் ஆகிய இருவரும் சென்னை தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மற்ற 2 பேர் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர்.

    சரண் அடைந்த 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சுசீந்திரம் போலீசார் நாகர்கோவில் ஜே.எம்.3 கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சரண் அடைந்த ரமேஷ், சுந்தர் இருவரையும் ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.

    இதையடுத்து நேற்று மாலை இருவரையும் போலீஸ் காவலில் எடுத்தனர். ரமேஷ், சுந்தர் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து நேற்றிரவு விடிய விடிய விசாரணை நடத்தினார்கள். அப்போது சுந்தர் போலீசாரிடம் கூறியதாவது:-

    நான், மினி பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். பஸ்சில் வைத்து எனக்கும், கொலை செய்யப்பட்ட அர்ஜுனின் சகோதரர் அஜித்துக்கும், இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில், அஜித் என்னை தாக்கினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை கண்டித்தேன். ஆனால் அவர், தொடர்ந்து என்னுடன் தகராறு செய்து வந்தார். பிரச்சினை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இருந்தது.

    அஜித்தின் சகோதரர் அர்ஜுனும் என்னிடம் பிரச்சினை செய்தார். சகோதரர்கள் இருவரும் என்னை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருப்பதாக நான் அறிந்தேன். இது தொடர்பாக எனது நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் நாம் முந்திக்கொள்வோம் என்று தெரிவித்தனர்.

    சம்பவத்தன்று சகோதரர்களை தீர்த்துக்கட்டுவதற்காக நாங்கள் அந்த பகுதியில் காத்திருந்தோம். அர்ஜுன் மற்றும் அவரது நண்பர் அஜித்தும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை வழி மறித்து வெட்டினோம். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இன்று மாலை இருவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

    இந்த கொலை வழக்கில் தலைமறைவாகி உள்ள 2 பேரை போலீசார் தேடி வரும் நிலையில் வேறு நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×