search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    பொள்ளாச்சியில் தண்ணீர் கேட்டு பி.ஏ.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

    பொள்ளாச்சியில் இன்று தண்ணீர் கேட்டு பி.ஏ.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பொள்ளாச்சி:

    பரம்பிக்குளம் ஆழியாறு எனும் பி.ஏ.பி. திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டி.எம்.சி.யும் கேரளத்திற்கு 19.55 டி.எம்.சியும் நீர் பகிர்மானம் செய்து கொண்ட ஒப்பந்தம் உள்ளது. தமிழகத்தில் 4.25 லட்சம் ஏக்கர் கேரளத்தில் சித்தூர் தாலுகாவில் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் திட்டத்தின் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

    இது தவிர கேரளத்தில் பாலக்காடு மாவட்டம், தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் தேவைகளுக்கும் நீர் ஆதாரமாக பி.ஏ.பி.திட்டம் உள்ளது. இதில் ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு 6 ஆயிரத்து 400 ஏக்கர்,புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 44 ஆயிரம் ஏக்கருக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    கேரளத்திற்கு ஒப்பந்தப்படி கொடுக்க வேண்டிய 19.55 டிஎம்சி தண்ணீரில் ஆழியாறு அணையில் இருந்து 7.25 டி.எம்.சி. தண்ணீர் மன கடவு அணையில் அளவீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மே 15-ந் தேதியில் இருந்து ஏப்ரல் 15-ந் தேதிக்குள் தண்ணீர் கேரளத்திற்கு வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வழங்க வேண்டிய 7.25 டி.எம்.சி. தண்ணீர் கேரளத்திற்கு வழங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு மே 15-ந் தேதி முதல் ஏப்ரல் 15-ந் தேதி வரை தண்ணீர் வழங்க வேண்டும். இந்த ஆண்டு மே 15-ந் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் முதல் போக நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பி.ஏ.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன் தங்கள் கோரிக்கைகளை மனுவாக பி.ஏ.பி. அலுவலகத்தில் வழங்கினர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மே 15-ந் தேதி இந்த ஆண்டு தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு மாதம் காலதாமதமாகி தற்போது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் முதல் போக நெல் சாகுபடி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தபோது அணையில் நீர் இருப்பு இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் கேரளத்திற்கு மே 15-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    கேரளத்திற்கு எப்போதெல்லாம் தண்ணீர் வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும்.

    இது எங்களது பாரம்பரிய உரிமையாகும். ஆனால் தற்போது வரை தண்ணீர் திறக்காததால் முதல் போக சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பி.ஏ.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி மனு அளிக்க வந்துள்ளோம் என்றனர்.
    Next Story
    ×